குடி பழக்கத்தால் ரத்த வாந்தி, கருப்பு மலம்! ரோபோ சங்கரின் உயிரை பறித்த கொடிய இரைப்பை குடல் ரத்த போக்கு.
நடிகர் ரோபோ சங்கருக்கு இரைப்பை குடல் ரத்தப்போக்கு ஏற்பட்டு அவரது பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவருக்கு மரணம் ஏற்பட்டது என தனியார் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருங்குடியில் இருக்கும் ஜெம் மருத்துவமனையின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ரோபோ சங்கர் கடந்த 16 ஆம் தேதி இரவு, சென்னை பெருங்குடியில் உள்ள எங்களது ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அனுமதிக்கப்பட்ட போதே மிகவும் மோசமான நிலையில்தான் வந்தார். அவருக்கு வயிற்று பகுதியில் ஏற்கெனவே பிரச்சினைகள் இருந்ததால் அவருடைய இரைப்பை குடலில் ரத்த போக்கு (Gastero Intestinal Bleeding) இருந்தது. இதனால் அவரது பல்வேறு உறுப்புகள் செயலிழந்த நிலையில் வந்திருந்தார்.
இத்தனை சிக்கல்கள் இருந்த நிலையிலும் அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று வியாழக்கிழமை 18ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Gastro intestinal Bleeding என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். வாய் முதல் மலக்குடல் இரைப்பைக் குழாயில் ஏற்படும் ரத்தப் போக்கு ஆகும். சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பர், சிலருக்கு கருஞ்சிவப்பு நிறத்திலும் ரத்த வாந்தி வரும். மலத்திலும் ரத்தம் காணப்படும் அல்லது மலம் கருப்பாக வரும்.
இந்த நோய்க்கான அறிகுறிகள் என்பது வயிற்று வலி, மூச்சுத்திணறல், வயிறு வீங்கி இருத்தல், வெளிர் தோல், மயக்கம் ஆகியவை ஆகும். சில நேரங்களில் இது போன்ற எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கும். இந்த ரத்தப்போக்கு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.
அவை பெப்டிக் அல்சர், கல்லீரல் சிரோசிஸ், புற்றுநோய் உள்ளிட்டவை ஆகும். இந்த நோயை என்டோஸ்கோபி எனும் சிகிச்சையின் மூலம் அறியலாம். இந்த நோய் ஏற்பட்டால் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும்.
இந்த நோய்க்கு ஒரே ஒரு சிகிச்சை அளித்தால் சரியாகிவிடும் என சொல்ல முடியாது. முதலில் நோயாளியின் உடலில் தேவைப்பட்டால் தேவையான திரவங்களும் ரத்தமும் ஏற்றப்படும். இரைப்பை குடலில் ஏற்படும் வயிற்றுப்போக்கை நிறுத்த அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, லேப்ரோஸ்கோபிக் சிகிச்சை உள்ளிட்டவைகளை செய்வதுண்டு.
இந்த நோயால் நிறைய ரத்த போக்கு ஏற்பட்டு ரத்தசோகையும் ஏற்படும். இதனால் முகமெல்லாம் கருத்து போய் இருக்கும். நோயாளியின் நிலையை பொருத்து இதற்கு சிகிச்சை அளிப்பார்கள். அறிகுறியை பொருத்தே உயிரிழப்பு ஏற்படுமா, அவரை சரி செய்ய முடியுமா என்பது தெரியவரும். இதற்கு தொடர் சிகிச்சையும் மருத்துவரின் அறிவுரைகளையும் கேட்டு நடத்தல் நல்ல பலனைத் தரும்.
காரமான உணவுகளையும், மதுபானங்களையும் காபி, டீ போன்றவற்றையும் அறவே தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ரோபோ சங்கருக்கு ஏற்கெனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதன் பிறகு வொர்க் அவுட் , ஜிம் , நடனம் என பழைய நிலைக்குத் திரும்பினார். பின்னர் தனது மகள் இந்திரஜாவுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்தார். பேரக் குழந்தையையும் கொஞ்சி மகிழ்ந்தார். அந்த குழந்தையின் 100-ஆவது நாள் விழாவையும் சிறப்பாக எடுத்தார். 2 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்த ரோபோ சங்கர் படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் அவருக்கு இரைப்பை குடல் ரத்தப்போக்கு ஏற்பட்டது கண்டறியப்பட்டு சிகிச்சை பலனின்றி இந்த உலகை விட்டு பிரிந்தார். இதற்கு காரணமாக மஞ்சள் காமாலைக்கு முன்னதாக சங்கர் குடிக்கு அடிமையாக இருந்ததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது .