தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல்குமார் நாளை திருச்சியில் நடைபெற உள்ள, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சார பயணம் குறித்து இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
திருச்சியில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ள இருக்கும் பிரச்சார பயணம் குறித்து அக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “நாளைய தினம் திருச்சியில் துவங்கி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரப்புரை நடைபெறுகிறது. 12 நாட்கள் இங்கு முகாமிட்டு நிர்வாகிகள் அனுமதி வாங்கி உள்ளனர். இன்று தான் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
தவெகவுக்கு காவல்துறை விதித்த நிபந்தனைகள்!
23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது வரை இது போன்ற சுற்று பயணத்திற்கு எந்த கட்சிக்கும் இப்படி நிபந்தனை விதிக்கப்பட்டதில்லை. இந்த சுற்றுப் பயணத்தில் கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவர்கள் குழந்தைகள் கலந்து கொள்ள வேண்டாம் என தவெக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
குச்சி, கம்பு, ஆயுதங்கள் வைத்திருக்ககூடாது என்று தெரிவித்துள்ளனர். கட்சிக்கொடி வைத்திருந்தாலும் அது கம்பு தான் என்று கூறுகின்றனர், இது போன்ற நிபந்தனைகள் எந்த கட்சிக்கும் போட்டதில்லை.
சுற்றுப் பயணத்திற்கு திமுக அரசு முட்டுக்கட்டை!
இதில் எந்த விதிமுறை மீறப்பட்டாலும் எந்த நேரத்திலும் இந்த பயணம் நிறுத்தப்படும் என்று காவல்துறை நிபந்தனையில் தெரிவித்துள்ளது. விஜய் பிரச்சார பயணத்திற்கு எல்லாவித முட்டுக்கட்டைகளையும் அரசு போடுகிறது. அதேசமயம் திமுகவின் ஆதரவோடு பாஜகவின் கூட்டணியான அதிமுக கூட்டங்கள் நடக்கிறது. எல்லாவித நிபந்தனைகளையும் கட்சியினர் கடைபிடிக்க வேண்டும பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். பல்வேறு கடுமையான நிபந்தனைகள் காவல்துறை கொடுத்துள்ளனர்” என்று கூறினார்.
மேலும் அவர், “ஒரு நாள் பயணத்திற்காக 12 நாள்கள் போராடி உள்ளோம். பெரும்பாலான இடங்களில் அதிமுகவுக்கு எந்த நிபந்தனைகளும் கொடுக்கவில்லை. திமுக அரசு முழு ஆதரவு கொடுத்துள்ளது. பொதுச் செயலாளர் போகும்போது பத்து நபர் மட்டுமே உடன் சென்றனர். மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் அனுமதி கிடைத்ததால் அங்கு சென்றோம். இதற்கும் வழக்கு கொடுத்துள்ளனர். காவல்துறை கொடுத்த கேள்வியில் நாம் யுனிவர்சிட்டி தேர்வை எழுதிவிடலாம்.
பேனர் வைப்பதற்கு காவல் துறை அனுமதி தரவில்லை. மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் எங்கள் தலைவர். அவரது ஆட்சி அமைய வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள். 2026 பெரிய மாற்றம் உண்டாகும். எந்த இடத்திலும் சட்டம் மீறப்படவில்லை” என்று கூறினார்.
விஜய் ஏன் சனிக் கிழமை மட்டும் பிரச்சாரம் செய்கிறார்?
ஏன் சனிக்கிழமை மட்டும் இந்த பிரச்சார பயணம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “வாரத்திற்கு ஒரு நாள் செல்வதற்கே 12 நாட்கள் போராடி அனுமதி பெற்று இருக்கிறோம். இதில் தினந்தோறும் என்றால் எப்படி என்ன சொல்ல முடியும்?” என்றார்.
விஜய்யின் சுற்றுப் பயணத்தை தொடங்க திருச்சியை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
எம்ஜிஆரின் செண்டிமென்ட்:
விஜயின் இந்த முதல் தேர்தல் பயணம், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நினைவுகளோடு இணைந்துள்ளது. மரக்கடை பகுதி என்பது எம்ஜிஆர் அடிக்கடி தனது தேர்தல் பிரச்சாரங்களை நடத்திய இடமாகும். அப்பகுதியில் எம்ஜிஆருக்கென ஒரு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. விஜய் தனது முதல் பிரச்சாரத்தை இங்கு தொடங்குவதன் மூலம், எம்ஜிஆரின் அரசியல் செண்டிமென்டை நினைவுபடுத்துகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரக்கடை பகுதியின் சிறப்பு:
திருச்சியில் உள்ள மரக்கடை பகுதி, அப்பகுதியில் பல தசாப்தங்களாக இயங்கிவரும் மர வியாபார நிலையங்களால் பிரபலமானது. அந்த வரலாற்று பெயரையே கொண்டு, பகுதி “மரக்கடை” என அழைக்கப்படுகிறது. நாளை நடைபெறவிருக்கும் விஜயின் முதல் தேர்தல் பிரச்சாரத்தை நினைவுகூர்ந்து, இப்பகுதி அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறப்போகிறது எனக் கூறப்படுகிறது.
விஜய் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருப்பது, அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் தவெக முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தற்போதைய அரசியல் சூழலில், திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு எதிராக, விஜயின் இந்த அறிவிப்பு புதிய சவாலாக மாறியுள்ளது.
தவெக ஆதரவாளர்கள் “விஜயை முதல்வராக” என்ற கோஷத்துடன் சமூக ஊடகங்களில் பிரசாரம் தீவிரமாக செய்து வருகின்றனர். விஜயின் முதல் தேர்தல் சுற்றுப்பயணம் நாளை திருச்சி மரக்கடையில் ஆரம்பமாகும் நிலையில், தமிழக அரசியல் அரங்கில் புதிய பரபரப்பும், மக்கள் மத்தியில் பெரும் ஆர்வமும் நிலவுகிறது. விஜயின் வருகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து தவெக தொண்டர்களை திருச்சிக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனா்.
“திருச்சி வரலாறு படைத்த பகுதி என்பதால் திருச்சியில் இந்த பிரச்சார பயணத்தை துவக்குகிறோம்” என தெரிவித்து உள்ளார் நிர்மல் குமார்.