திருச்சியில் 10, 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய. அமைச்சர்கள் கே என்.நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருச்சியில் 10, 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற
பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா
அமைச்சர்கள் கே என்.நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு..
திருச்சி காட்டூர் மாண்ட் போர்ட் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விழாவில் 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 2982 அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற 142 மாணவ, மாணவிகள் என மொத்தம் 3,124 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும்விழா நடைபெற்றது
விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் 10, 12- ஆம் வகுப்பு அரசு,உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகள் 3,124 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் :
திமுக ஆட்சியில் புதிதாக பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறையில் இது போல் ஆசிரியர்களை அழைத்து பாராட்டுவது எந்த காலத்திலும் நடக்கவில்லை.
கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக அன்பில் மகேஸ் பொறுப்பேற்ற பிறகு, ஆசிரியர்களையும், மாணவர்களையும் அழைத்து தொடர்ந்து பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது ஆசிரியர்களை மேலும் உற்சாகப்படுத்தி சிறப்பாக பணியாற்றுவதற்கு துணையாக இருக்கும்.
ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கேட்டு பரிட்சை எழுதியவன் நான். புத்தகங்களை படித்து படித்து பரிட்சை எழுதியது கிடையாது.
அரசு பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
தனியார் மருத்துவமனைகளை காட்டிலும், அரசு மருத்துவமனையில் தான் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதுபோல, அரசு பள்ளியில் தான் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு காரணம் ஆசிரியர் பெருமக்கள் தான். தமிழில் 100 மதிப்பெண்கள் பெறுவது என்பது கடினமான ஒன்று. மேல்நிலைப் பள்ளியில் 134 மாணவர்களும், பத்தாம் வகுப்பில் எட்டு மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்த வெற்றிக்கு ஆசிரிய பெருமக்கள் தான் காரணம்.
திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மாநகர பேருந்து முனையத்திற்கு அருகே 10 ஏக்கர் அரசு நிலம் வைத்திருக்கிறோம். அதில் அரசு விழாக்கள் நடத்துவதற்கான அரங்கம் கட்டப்படும் இனி அந்த இடத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அங்கு விழாக்களை நடத்தலாம் என்று பேசினார்.
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில் :.-
தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களை பல துறையினர் பாராட்டிவருகின்றனர். காலம் கனியும்போது ஒவ்வொரு திட்டம் பற்றியும் கட்டாயம் விரிவாக உங்களிடம் பேசுவேன்.தமிழ் மொழி பாடத்தில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிருப்பது தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமை.
இன்று பாராட்டுவதற்கு தகுதி பெற்ற மாணவர்கள், எதிர்காலத்தில் பல துறைகளில் சாதித்து, பல்வேறு பாராட்டுகளை பெறவுள்ளனர். அதற்கான அடித்தளம் தான் இந்த விழா.
சாதனை படைத்த மாணவர்கள், அதற்காக உழைத்த ஆசிரியர்கள், வழிநடத்திய தலைமை ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். அனைவரது சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கப்பலுக்கு கேப்டன் எப்படியோ! அது போலத்தான் பள்ளிக்கு தலைமை ஆசிரியர்.
மாநில அளவிலான அடைவு தேர்வு முடிவுகளை தற்சமயம் 23 மாவட்டங்களில் ஆய்வு செய்துள்ளேன்.
இந்த ஆய்வுக்கு சென்ற இடங்களில் ஆசிரியர்கள் எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் கூட அவற்றைக் கடந்து நாங்கள் சாதிப்போம் என்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்.இன்னும் 12 மாவட்டங்கள் மீதம் உள்ளன. இங்கு வந்திருப்பவர்களை பாராட்டுவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் தமிழ்நாட்டின் சொத்துகள் என்று பேசினார்.
இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் சரவணன்,மண்டல குழு தலைவர் மதிவாணன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்கம் இயக்குனர் நரேஷ், அரசு தேர்வுகள் இயக்கம் இயக்குனர் சசிகலா, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் துணைத் தலைவர் முத்துக்குமார், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.