திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் பகல் கொள்ளை. அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் பகல் கொள்ளை.
திருச்சி மாநகராட்சி உட்பட்ட பல பகுதிகளிலும் புதிய பாதாள சாக்கடை பணிகள், பல சாலைகளை பறித்து, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும், உலகத்தில் எங்கும் இல்லாத அதிசயமாக, பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்டுள்ள இடங்களில், தார் சாலைகள் அமைக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை.
ஒவ்வொரு சாலையிலும் பல வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர்களை இணைக்கும் சேம்பர்கள் உள்ளன.
இதற்குக் காரணம், புதிய இணைப்புகள் கொடுக்கும் பொழுதோ அல்லது அடைப்புகள் ஏற்படும் பொழுதோ, அந்த சேம்பர்களின் மூடியை திறந்து சுத்தம் செய்ய எதுவாக இருப்பதே காரணம்
புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ள பல இடங்களிலும், இப்படிப்பட்ட சேம்பர்களின் முடி மீது தார் ஊத்தி, அதன் மீது சாலை அமைத்து சேம்பரை மூடி விடுகின்றனர்.
அச்சாலைகளில் வசிக்கும் மக்கள் பாதாள சாக்கடை இணைப்புக்காக மாநகராட்சியை அணுகுகின்ற பொழுது, சில அதிகாரிகள் துணையுடன், தனியார் ஒப்பந்தக்காரர்கள் என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிலும் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் முதல் முப்பதாயிரம் வரை வசூலிக்கிறார்கள்.
ஏற்கனவே மாநகராட்சியில் இப்பணிகளை செய்த ஒப்பந்தக்காரர்கள் சரியாக பணிகளை செய்யவில்லை, நீர் செல்லும் வாட்டம் சரியாக அமைக்கவில்லை, முடி மீது அமைக்கப்பட்ட தார் சாலையை பெயர்க்க வேண்டும் என்று பல காரணங்கள் கூறி பொதுமக்களிடம் வசூல் செய்கின்றனர்.
இப்பணிகளுக்காக வாங்கப்படும் பணத்திற்கு எவ்வித எழுத்துப்பூர்வமான ரசீதும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் வசிக்கும், மாநகராட்சிக்கு தட்டாமல் வரிகட்டும் மக்கள், தங்களது அத்யாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு, பணிகள் உடனடியாக நடக்க வேண்டும் என்ற காரணத்தினால், இப் பகல் கொள்ளையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதாள சாக்கடைகள் அமைப்பது மாநகராட்சியின் கொள்கை முடிவு. வரிகட்டும் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பாதாள சாக்கடையை இணைக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை.
அப்படி இருக்கையில் மாநகராட்சியின் பழைய ஒப்பந்தக்காரர் சரிவர வேலை செய்யவில்லை என்று வரி செலுத்தும் மக்களிடம் பணம் கேட்பது எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
இப்பணிகளை செய்யும் ஒப்பந்தக்காரர்கள், மாநகராட்சி தான் வசூலிக்க சொல்கிறார்கள் என்றால் அதற்குரிய ஆவணங்கள் என்ன?
திருச்சியில் இது போன்ற நிகழ்வுகளே நடக்கவில்லை என்று யாரேனும் கூறுவார்களேயானால், சம்பந்தப்பட்ட தெருவின் பெயர்களையும் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்களையும் கூறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எனவே திருச்சி மாநகராட்சியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும், இப் பிரச்சனையில் தலையிட்டு, வரி செலுத்தும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதை உடனடியாக தடுக்க வேண்டுகிறேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் .