Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று விநாயகர் சிலை கரைப்பு . திருச்சியில் போக்குவரத்து மாற்றம் . முழு விவரம் …

0

'- Advertisement -

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தையொட்டி, திருச்சி மாநகரில் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகளை (இன்று வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 29, 2025 ) கரைப்பதற்கான ஊர்வலம் நடைபெற உள்ளது.

 

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பேணும் வகையில், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் ந. காமினி தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்திற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்யும் வகையில், காவல்துறை ஆணையர் ந. காமினி உத்தரவின்படி, மாநகரின் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 26 அன்று அரியமங்கலம் மற்றும் உறையூர் காவல் நிலைய எல்லைகளிலும், ஆகஸ்ட் 27 அன்று காந்தி மார்க்கெட்டில் இருந்து தொடங்கி கோட்டை, பெரியகடைவீதி, மலைக்கோட்டை, என்.எஸ்.பி.சாலை, தெப்பக்குளம் வழியாக சிந்தாமணி அண்ணா சிலை வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 192 காவல்துறையினர் பங்கேற்றனர்.

 

இன்று ஆகஸ்ட் 29, 2025 பிற்பகல் 4:00 மணி முதல் நாளை ஆகஸ்ட் 30, 2025 அதிகாலை 6:00 மணி வரை திருச்சி மாநகரில் வாகனப் போக்குவரத்தில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

இன்று ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள 50 மதுபானக் கடைகளும் மூடப்படும் என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

 

துறையூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், வாத்தலை ஆகிய பகுதிகளில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் அனைத்தும் நெ.1 டோல்கேட், கொள்ளிடம் பாலம், திருவானைக்காவல் டிரங்க் ரோடு வழியாக மாம்பழச்சாலையில் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லும். பின்னர் அம்மாமண்டபம், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் வழியாக ராஜகோபுரம், காந்தி சாலை, திருவானைக்காவல் சந்திப்பு, திருவானைக்காவல் டிரங்க் ரோடு, புதிய கொள்ளிடம் பாலம் வழியாக மீண்டும் பயணத்தைத் தொடரும்.

 

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்துகள் கலைஞர் அறிவாலயம், கரூர் பைபாஸ் ரோடு, கே.டி. ஜங்ஷன், சாஸ்திரி ரோடு, அண்ணா நகர் உழவர் சந்தை, வ.உ.சி. சிலை, நீதிமன்ற சந்திப்பு, தலைமை தபால் நிலையம் சந்திப்பு, டிவிஎஸ் டோல்கேட், பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ் சாலை, சஞ்சீவி நகர், கே.கே. சாலை வழியாக திருவானைக்காவல் மேம்பாலம், மாம்பழச்சாலை, அம்மாமண்டபம், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பும்.

 

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவெறும்பூர், துவாக்குடி செல்லும் பேருந்துகள் கலைஞர் அறிவாலயம், கரூர் பைபாஸ் ரோடு, கே.டி. ஜங்ஷன், சாஸ்திரி ரோடு, அண்ணா நகர் உழவர் சந்தை, வ.உ.சி. சிலை, நீதிமன்ற சந்திப்பு, முத்தரையர் சிலை சந்திப்பு, தலைமை தபால் நிலையம் சந்திப்பு, டிவிஎஸ் டோல்கேட், பால்பண்ணை ரவுண்டானா வழியாகச் சென்று அதே வழியில் திரும்பி வரும்.

 

சரக்கு மற்றும் கனரக வாகனங்களுக்கான மாற்றங்கள்:

 

கோயம்புத்தூர், கரூர் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை செல்லும் வாகனங்கள் குளித்தலை காவேரி பாலத்தில் திருப்பி விடப்பட்டு, முசிறி, நெ.1 டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை வழியாக தஞ்சாவூருக்கும், டிவிஎஸ் டோல்கேட் வழியாக புதுக்கோட்டைக்கும் செல்ல வேண்டும்.

 

தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து கரூர் செல்லும் வாகனங்கள் பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ் ரோடு, காவேரி பாலம், நெ.1 டோல்கேட் வழியாக முசிறி, குளித்தலை சென்று அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும்.

 

பாதுகாப்புப் பணியில் மொத்தம் 1500 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் ந. காமினி கேட்டுக்கொண்டுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.