Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சென்னை கோட்டை முற்றுகை போராட்டம். 25 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு. திருச்சி நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு .

0

'- Advertisement -

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்

 

சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் –

25 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு.

 

திருச்சியில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு.

 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் செ.வெங்கடேசன் தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பொதுச்செயலாளர் ரெ.ஈவேரா பேசினார். கூட்டத்தில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும். இவைகள் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்ககல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் ஆகஸ்ட் 22-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.

 

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து 25 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு வெளியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கை 2025ஐ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. மாநிலக் கல்விக் கொள்கையை நிலை நிறுத்தும் வகையில், கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை தவிர்த்து, மாநில கல்விக் கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் என்ற நிலையில், தேசிய கல்விக் கொள்கையின்படி கைவிடப்பட்ட உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கும் முறையினை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் முழுமையான காப்பீடு வழங்கப்படுவதில்லை. முழுமையான மருத்துவ செலவுகளையும் காப்பீடு தொகையாக வழங்க வேண்டும். மருத்துவமனை மற்றும் காப்பீடு நிறுவனத்துடன் செய்துவைத்த ஒப்பந்தப்படி, மருத்துவமனைகளுக்கு வழங்க நிர்ணயிக்கப்பட்ட காப்பீடு தொகை குறித்த ஒப்பந்த விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மேனாள் மாநில நிர்வாகிகள் ஈ.ராஜேந்திரன், அ.சுதாகரன், வில்சன் பர்னபாஸ், இரா.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

முன்னதாக திருச்சி மாவட்டச் செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். இறுதியில் மாநிலப் பொருளாளர் சி.துரைராஜ் நன்றி கூறினார்.

 

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.