கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை குடிபோதையில் கணவன் துரத்தி துரத்தி வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.
திருச்சி மாவட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த மனைவியை குடிபோதையில் கணவன் துரத்தி துரத்தி வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அப்போது குழந்தை பார்த்து அலறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தனது தாய் வீட்டில் இருந்த மனைவியை விடாமல் துரத்தி துரத்தி அறிவாளால் வெட்டிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். தனது மகளை அறிவாளால் வெட்டிய வீரமணிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாத்திமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக்தி ஜீவா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வீரமணிக்கும் சக்தி ஜீவாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தனது தாயார் வீட்டிற்கு சக்தி ஜீவா சென்று தங்கி உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே கணவன் வீரமணி குடிபோதையில் சக்தி ஜீவாவின் வீட்டுக்குச் சென்று அவரை துரத்தி துரத்தி அறிவாளால் வெட்டி உள்ளார். இதில் கழுத்து, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சக்தி ஜீவாவை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது பெற்றோர் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து குடிபோதையில் தனது மகளை வெட்டியதாக வீரமணி மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில், வீரமணியை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், சக்தி ஜீவாவை வீரமணி துரத்தி துரத்தி வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயை வெட்டியதை பார்த்த குழந்தை அதிர்ச்சியில் துடித்தது பதைப்பதைக்க செய்து உள்ளது.