திமுகவுக்கு ஆதரவு தருவதா என ஜனவரியில் முடிவெடுப்போம் .தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை டிசம்பருக்குள் நிறைவேற்றவில்லையென்றால்
சட்டமன்ற தேர்தலில் ஆதரவு குறித்து
ஜனவரியில் முடிவு எடுப்போம்
திருச்சியில் நடந்த
மாநில மைய சங்க கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் எஸ். மதுரம் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர் டாக்டர் கே கணேசன், திருச்சி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மாநில பொதுச் செயலாளர் முனியப்பன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் சங்கர், நல்லுசாமி, ஜெயக்குமார், ராஜேந்திரன், மாநில துணை பொதுச்செயலாளர்கள் இசக்கிமுத்து,பாபு,
ரமேஷ் மற்றும் மாநில மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு;-
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். அதேபோன்று நீதிமன்ற உத்தரவுப்படி இரவு காவலர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். இரவு காவலர் பணிக்கு பகலில் நியமிக்கப்பட்ட அலுவலக உதவியாளர்களை பணியில் ஈடுபடுத்த நிர்பந்திக்க கூடாது தமிழ்நாடு பொது சுகாதார துறையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நியமனம் செய்யப்பட்ட அனைத்து பல்நோக்கு பணியாளர்களையும் காலம் முறை ஊதியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் தமிழ்நாடு ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சிகளில் பணிபுரியும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் கொண்டுவர வேண்டும் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள், கல்வித்துறை, காவல்துறை போன்ற அனைத்து துறைகளிலும் நியமனம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 12,527 ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
போன்ற தீர்மானங்கள் அனைத்தும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் திமுகவுக்கு 4 லட்சத்து 24 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் வாக்களிப்பது குறித்து ஜனவரியில் முடிவு செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் மாநில பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.