அருமனை அருகே வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு மாயமான நர்ஸ், வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொண்ட வீடியோ காட்சியை இன்ஸ்டாகிராமில் பார்த்து அவரது கணவர் அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மயிலாடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26). கொத்தனார். இவருக்கும், குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியை சேர்ந்த அபிஷா (வயது 22) என்பவருக்கும் கடந்த 2022ல் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின், அஜித்குமார், குலசேகரம் தும்பக்கோட்டில் உள்ள மனைவி வீட்டில் தான் வசித்து வந்தார். அபிஷா அருமனை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக இருந்தார். வாரம் ஒருமுறை தான் வீட்டுக்கு வருவார். அஜித்குமார் தான், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று மனைவியை பார்த்து விட்டு வருவது வழக்கம். அதன்படி கடந்த வாரம் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த அபிஷா, கடந்த 2ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி மருத்துவமனைக்கு புறப்பட்டார். மீண்டும் 9ம் தேதி திரும்பி வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி, மனைவியை பார்க்க அஜித்குமார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அபிஷா இல்லை. இதுகுறித்து விசாரித்த போது உறவினர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என கூறி, வாலிபர் ஒருவருடன் பைக்கில் அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார் என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அஜித்குமார், பல்வேறு இடங்களில் மனைவியை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அஜித்குமரின் நண்பர் ஒருவர் அவரை சந்தித்து, உனது மனைவி வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் உள்ளது என கூறி காண்பித்துள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த போது அவரது மனைவி அபிஷா, மற்றொரு வாலிபருடன் திருமண கோலத்தில் இருந்தார். உறவினர்கள் வாழ்த்து கூற இருவரும் கோயில் ஒன்றில் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்ததும் கதறிய அஜித்குமார், உடனடியாக அருமனை காவல் நிலையத்துக்கு சென்று வீடியோவை காட்டி புகார் அளித்தார். மருத்துவமனையில் இருந்து தனது மனைவியை ஏமாற்றி அழைத்து சென்று மற்றொரு வாலிபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவளை மீட்டு கொடுங்கள் என கூறினார். தற்போது இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் அபிஷா மற்றும் அவரை திருமணம் செய்த வாலிபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோவை பார்க்கும் போது ஏமாற்றி திருமணம் செய்தது போல் இல்லை. இருவருமே விரும்பி உறவினர்கள் வாழ்த்த திருமணம் நடந்துள்ளது. அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டால் தான், இது தொடர்பான முழு விபரங்களை கூற முடியும்’ என்றனர். அபிஷா, தனக்கு முதல் திருமணம் நடந்ததை மறைத்து 2வது திருமணம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது அஜித்குமார் புகாரின் பேரில் போலீசார் அபிஷா மாயம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீட்கப்பட்டால் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.
இது குறிப்பிடத்தக்க விஷயம் 11ம் வகுப்பு முடித்தவர் நர்சானது எப்படி? என்பதுதான் .
அருமனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த அபிஷா, 11ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் படிப்பை நிறுத்திய அபிஷா, நர்சாக சேர்ந்துள்ளார். 11ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அபிஷா எவ்வாறு நர்ஸ் வேலையில் சேர்ந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு சேரும் போது கொடுத்த சான்றிதழ்களை சரி பார்த்து வருகிறார்கள்.