புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுமையா பானு.
இவர் தனது கணவருடன் மணப்பட்டியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் படுக்கை அறையில் தம்பதி தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பின்பக்கமாக உள்ளே குதித்த 3 பேர், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியும், அவரது கணவரை தாக்கியும் 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக இருப்பதால் அதை திட்டமிட்டு கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகமாகி விட்டது. வீடு புகுந்து கொள்ளையர்கள் திருடும் சம்பவங்கள் அதிகமாகிவிட்டது. எஸ்கேப் ஆனால் லைப் செட்டில், பிடிப்பால் வாழ்க்கையே ஜெயில் என்ற நிலையிலும் கொள்ளையர்கள் தைரியமாக செய்கிறார்கள். அப்படித்தான் புதுக்கோட்டையில் சப் இன்ஸ்பெக்டரையே வீடு புகுந்து கட்டிப்போட்டு தங்க நகைகளை திருடி உள்ளார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக சுமையா பானு இருக்கிறார். இவரது கணவர் நாகசுந்தரம் (வயது 37) திருமயம் பாய்லர் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் புதுக்கோட்டை அருகே மணப்பட்டியில் வசித்து வருகிறார்கள். கடந்த நேற்று முன்தினம் திங்கட்கிழமை அன்று நள்ளிரவில் வீட்டில் தம்பதியினர் தூங்கி கொண்டிருந்தார்கள்.

அப்போது வீட்டின் பின்பக்கம் வழியாக வந்த மர்ம நபர்கள் 3 பேர் சுவர் ஏறி குதித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்தனர். வீட்டிற்குள் நுழைந்த 3 பேரும் படுக்கையறைக்குள் மின்னல் வேகத்தில் நுழைந்துள்ளனர். அப்போது தூங்கி கொண்டிருந்த நாகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் சுமையாபானு திடுக்கிட்டு எழுந்தனர்.
அப்போது திருடர்கள் முகத்தை துணியால் மூடியபடியும், சட்டை அணியாமல், கைலியை தொடைக்கு மேல் சுற்றி கட்டிக்கொண்டும், கையில் இரும்பு கம்பிகளுடன் இருந்தார்களாம். திடீரென அவர்கள் நாகசுந்தரத்தை இரும்பு கம்பியால் தாக்கி நகை, பணத்தை கேட்டு மிரட்டினார்களாம். மேலும் சப்-இன்ஸ்பெக்டரை சத்தம் போடக்கூடாது என ஆயுதங்களை காட்டி மிரட்டி தரையில் அமர வைத்தார்களாம்.
கொள்ளையர்கள் அச்சுறுத்தியதால் பதறிப்போன தம்பதியினர் உடனடியாக தங்களது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலிகள் மற்றும் மோதிரம் என 10 பவுன் நகைகளை கழற்றி கொடுத்தார்கள். அதனை பெற்றுக்கொண்ட பின்பும், வீட்டில் உள்ள மற்ற அறைகளிலும் நகை, பணம் எதுவும் இருக்கிறதா? என கொள்ளையர்கள் தேடியுள்ளார்களாம். எதுவும் கிடைக்கவில்லை..இதையடுத்து வீட்டின் பின்பக்கம் உள்ள தைல மரக்காடு வழியாக தப்பிச்சென்று விட்டார்களாம்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் மோப்பநாய் தீரன் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அது மோப்பம் பிடித்து வீட்டின் பின்பக்கம் தைலமரக்காடு வரை சென்றது, யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இந்த கொள்ளை சம்பவத்தில் காயமடைந்த நாகசுந்தரம் சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் நடந்த வீட்டை புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா நேற்று காலை பார்வையிட்டார். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.