பெற்றோரின் கண் முன்னே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 13 வயது சிறுவன். பாஜக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் .
தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பின் திரும்பிய போது கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்த சிறுவன் பெற்றோர் கண்முன்பே நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பாஜகவும், பொதுமக்களும் மறியல் செய்ததால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகுமார். கூலித்தொழிலாளி. இவரது மகன் தர்ஷன் (வயது 13). இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த சித்திரை தேரோட்டத்தில் கலந்து கொள்ள தனது பெற்றோருடன் சிறுவன் தர்ஷன் வந்தார்.
நொச்சியம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குறுக்கே நடைபயணம் மேற்கொண்டு ஶ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று சித்திரை தேர் திருவிழாவில் பெற்றோருடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார் சிறுவன் தர்ஷன்.
மீண்டும் ஊருக்கு செல்ல கொள்ளிடம் ஆற்றில் நடந்து வந்துள்ளனர். அப்போது சிறுவன் தர்ஷன் தந்தையிடம் ஆற்றில் குளிக்க வேண்டும் என கேட்டுளார். முதலில் மறுப்பு தெரிவித்தாலும் தன் மகனின் ஆசையை நிறைவேற்ற நாங்கள் நிற்கும் பகுதியில்.தான் குளிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு குளிக்க அனுமதி அளித்துள்ளனர்.
இதையடுத்து ஆற்றில் இறங்கி தர்ஷன் குளித்துள்ளார். அங்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிக்காக ஆற்றில் தோண்டப்பட்ட பள்ளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற தர்ஷன் பெற்றோர் கண் எதிரிலேயே தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். உடன் அப்பகுதியில் இருந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஓடி வந்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி சிறுவன் தர்ஷனை தேடினர். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் சிறுவன் தர்ஷன் மீட்கப்பட்டார். உடன் தர்ஷனை சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் தர்ஷன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைகேட்டு பெற்றோர் கதறிய கதறல் அங்கிருந்தவர்கள் மனதை உலுக்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து வந்து தர்ஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் சிறுவன் உயிரிழப்பிற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் பணி நடைபெற்ற இடத்தில் எச்சரிக்கை பலகைகள் வைக்கவில்லை. திருவிழா நாட்களில் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பிற்கு போலீசாரும் வரவில்லை எனக்கூறி 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாஜக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் திருச்சி – நாமக்கல் சாலையில் நொச்சியம் நான்கு ரோடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்த மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் பழனிவேல், ஜீயபுரம் டிஎஸ்பி, மற்றும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது தாசில்தார் கூறுகையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது விசாரணை நடத்தபடும். மாணவன் இறப்பிற்கு முதல்வர் நிவாரணத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பாஜகவினர் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தர்ஷன் இறந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.