வீட்டுப்பாடம் செய்யாத அரசு பள்ளி ஏழாம் வகுப்பு மாணவியை தோப்புக்காரணம் போட சொன்ன ஆசிரியைக்கு ரூ 2 லட்சம் அபராதம்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, எஸ் எஸ் கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவியை வீட்டுப்பாடம் செய்து வராததால் 400 முறை தோப்புக் கரணம் போட வைத்துள்ளார் ஆசிரியை சித்ரா.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஏழாம் வகுப்பு மாணவி சிகிச்சை பெற்றார்.

இந்த சூழலில் மாணவியின் தாய் பாண்டிசெல்வி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
2017 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரித்து வந்தார்.
இதில் ஆசிரியை சித்ரா தரப்பு விளக்கமளிக்க பலமுறை வாய்ப்பளித்தும் பதிலளிக்கவில்லை எனவும் ஆணையம் வசம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் ஆசிரியை சித்ரா மனித மீறலில் ஈடுபட்டது தெளிவாகிறது என்று கூறியும் ஆசிரியருக்கு அபராதம் விதித்துள்ளார் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்.
அதாவது மனுதாரருக்கு இழப்பீடாக ஒரு மாதத்தில் 2 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் இந்த தொகையை ஆசிரியை சித்ராவிடமிருந்து வசூலிக்கவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.