திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரங்கு அமைக்க இன்று பூமி பூஜை. முன்னேற்பாடு பணிகள் தீவிரம். பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள் விபரம்….
வரும் மே 9 – ந் தேதி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறப்பு:
திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா அரங்கு அமைக்க இன்று பூமி பூஜை
முழு வீச்சில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.
திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், பல்வகை பயன்பாட்டு வசதிகளுக்கான சேவை மையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.492.55 கோடி மதிப்பீட்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில், குளிரூட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் 120 எண்ணிக்கையில் புறநகர் பேருந்து நிறுத்த தடங்களும், 141 எண்ணிக்கையில் நீண்ட நேர பேருந்து நிறுத்த தடங்களும், 84 எண்ணிக்கையில் குறைந்த நேர நிறுத்த தடங்களும், 56 எண்ணிக்கையில் நகரப்பேருந்து நிறுத்த தடங்களும் என 401 எண்ணிக்கையில் பேருந்து நிறுத்த தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் 78 எண்ணிக்கையில் கடைகளும், 216 எண்ணிக்கையில் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள், 1935 எண்ணிக்கையில் இரண்டு சக்கர வாகன நிறுத்தங்கள், 100 எண்ணிக்கையில் ஆட்டோ ரிக்ஷா நிறுத்தங்கள், 12 எண்ணிக்கையில் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிகட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பேருந்து முனையத்தில் பொருட்கள் பாதுகாப்பு அறை, பேருந்து முன்பதிவு கட்டண அறை, போக்குவரத்து காப்பாளர் அறை, மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கும் மற்றும் அவர்களை அழைத்து செல்ல ஏதுவாக சக்கர நாற்காலிகள் வசதிகளும், பயணிகள் காத்திருப்போர் அறை மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளும், தீயணைப்பு தடுப்பு அமைப்புகள், பேருந்து ஓட்டுநர்கள் & நடத்துனர்களுக்கான ஓய்வு அறைகள், பாதுகாப்பாளர் அறை, உயர் மின் கோபுர விளக்குகள், காவலர் கட்டுப்பாட்டு அறை, அனைத்து பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், ஆண்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள் 52 எண்ணிக்கையிலும், மாற்று திறனாளிகளுக்கான கழிவறைகள் 4 எண்ணிக்கையிலும், பெண்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள் 81 எண்ணிக்கையிலும், திருநங்கைகளுக்கான கழிவறைகள் 2 எண்ணிக்கையிலும் மற்றும் சிறுநீர் கழிப்பிடம் 173 எண்ணிக்கையிலும், 21 எண்ணிக்கையில் குளியல் அறைகள் இப்பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.பேருந்துகள் வந்து செல்லும் விபரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பேருந்து கால அட்டவணை மற்றும் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் முனையத்தின் தெற்கு பகுதியில் ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் குறுகிய கால பேருந்து நிறுத்த தடங்கள் 45 எண்ணிக்கைகளும் மற்றும் நடமாடும் பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்த தடங்கள் 37 எண்ணிக்கைகளும் ஆக மொத்தம் 82 எண்ணிக்கை பேருந்து நிறுத்த தடங்கள் அமைக்கப்படவுள்ளது.பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த அதிநவீன பேருந்து நிலையம் உள்ளிட்ட இப்பேருந்து முனையம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மே மாதம் 9-ந்தேதி திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வருகின்ற மே மாதம் 9-ந் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு விழா அரங்கு அமைப்பதற்கான பூமி பூஜை செய்து, முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார். இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,மத்திய மாவட்ட திமுக செயலாளரும், நகரமைப்புக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் வைரமணி, மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மண்டல் தலைவர் துர்கா தேவி , மாவட்ட துணைத் தலைவர் முத்துச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.