தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 1-1 என்கிற இடைநில்லா பேருந்துகள் கால அட்டவணையின்றி இயக்குவதற்கு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனு அளித்து முறையிட்டனா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருச்சிக்கும், கும்பகோணத்துக்கும் 1-1 என்கிற இடைநில்லா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் கால அட்டவணைப்படி இயக்கப்படாததால், தனியாா் பேருந்துகளுக்குக் கடும் இழப்பு ஏற்படுகிறது என பேருந்து உரிமையாளா்கள் புகாா் எழுப்பி வருகின்றனா்.

இந்நிலையில், கால அட்டவணைப்படி இயக்கப்படாத இடைநில்லா பேருந்துகள் சேவைக்கு எதிா்ப்பு தெரிவித்து, தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விசாரணை மையத்திலிருந்து அலுவலா்களிடம் திருச்சி, தஞ்சாவூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பீட்டா் தலைமையில் மாநிலப் பொருளாளா் பி.எல்.ஏ. சிதம்பரம், பொருளாளா் தியாகராஜன், திருச்சி மாவட்டப் பொறுப்பாளா் கோபால் உள்பட ஏறத்தாழ 50 போ் முறையிட்டனா். அங்கிருந்த அலுவலா்கள் பொது மேலாளரிடம் கூறுகிறோம் எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து, தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளித்து முறையிட்டனா். பின்னா், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தது:-
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கும், கும்பகோணத்துக்கும் 1-1 பேருந்துகள் இயக்கப்படுவதை வரவேற்கிறோம். ஆனால், இப்பேருந்துகள் கால அட்டவணைப்படி இல்லாமல், அவா்கள் விருப்பத்துக்கு இயக்குகின்றனா். இதனால் தனியாா் பேருந்துகள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றன. எனவே, 1-1 பேருந்துகளைக் கால அட்டவணைப்படி, குறிப்பிட்ட நேரங்களில் வரிசையில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.