பவானியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய கையோடு மாணவிகள் 5 பேர் மாயமாகிய நிலையில் சமயபுரத்தில் மீட்கப்பட்டனர்.
இது குறித்த விபரம் வருமாறு, கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.
சமூக அறிவியல் தேர்வுடன் நிறைவடைந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் தேர்வை எழுதிய மாணவிகள் நேற்று மதியம் வெளியே வந்தனர். இதில் பவானியை சேர்ந்த 4 மாணவிகளும், சித்தோடு பகுதியை சேர்ந்த ஒரு மாணவியும் என மொத்தம் 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை.
ஈரோட்டில் தேர்வு எழுதிய ஐந்து மாணவிகள் வீடு திரும்பாத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசி தேர்வை எழுதி முடித்ததால் மாணவிகள் ஒன்றாக சேர்ந்து வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பலாம் என்று இரவு வரை பெற்றோர்கள் காத்திருந்தனர்.
ஆனால் 8 மணிக்கு மேலாகியும் மாணவிகள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரித்தனர். அங்கு மதியம் தேர்வு முடிந்ததும் அனைத்து மாணவிகளும் புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் உறவினர்கள், மாணவிகளின் தோழிகள் வீடுகளிலும் பெற்றோர்கள் சென்று கேட்டனர். ஆனால் மாயமான மாணவிகள் எங்கு சென்றனர் என்ற விவரம் தெரியவில்லை. பதற்றம் அடைந்த 5 மாணவிகளின் பெற்றோரும் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பவானி டி.எஸ்.பி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பள்ளிக்கூடத்தில் இருந்து மாணவிகள் 5 பேரும் மதியம் 1.20 மணிக்கே வெளியேறியது தெரியவந்தது. பள்ளிக்கூடத்தில் இருந்து புறப்பட்ட மாணவிகள் எந்த வழியாக சென்றனர்? அவர்களுடன் வேறு யாரும் உடனிருந்தனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
மாணவிகளிடம் செல்போன் உள்ளதா? கடைசியாக அவர்களது செல்போனில் இருந்து யாருக்கு பேசப்பட்டது? போன்ற விவரங்களையும் போலீசார் பெற்றோர்களிடம் இருந்து கேட்டறிந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு மாயமான மாணவிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுட்டனர்.
இந்நிலையில், மாயமான 5 மாணவிகளில் ஒருவரிடம் செல்போன் இருந்தது தெரிய வந்ததால் அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்து தேடிய போது அது சமயபுரம் பகுதியை சுட்டிக்காட்டியதால் திருச்சி மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் லால்குடி டிஎஸ்பி மற்றும் சமயபுரம் காவல் நிலைய போலீசார் களத்தில் இறங்கி சமயபுரம் கோவில் அருகே 5 மாணவிகளையும் ஒரே இரவில் போலீசார் மீட்டனர்.
அந்த மாணவிகளை விசாரித்ததில், தேர்வு எழுதிவிட்டு மாணவிகள் 5 பேரும் திருச்சி சமயபுரத்தில் தேர் திருவிழா நடைபெற்று வருவதால், அதைப் பார்த்துவிட்டு, மாரியம்மன் கோவிலுக்கு சென்று பொதுத் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று சாமி தரிசனம் செய்ததாகவும், பெற்றோருக்கு தகவல் கொடுக்காமல் மாணவிகள் 5 பேரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து மாரியம்மன் கோவிலில் மீட்கப்பட்ட 5 மாணவிகளும் பவானி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. பின்னர், மாணவிகள் 5 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.