விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் பெண் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற 2 பெண்களை காவல்துறையினர் அழைத்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களை சோதனை செய்த போது 2 பெண்கள் காலில் டேப்புகள் அணிந்து புதுவையில் இருந்து 240 மது பாட்டில்களை நூதன முறையில் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் செஞ்சி பகுதியை சேர்ந்த யசோதா (வயது 77), சின்ன பாப்பா(வயது 44) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் புதுவையில் இருந்து மதுபானங்களை கடத்தி செஞ்சி பகுதிக்கு எடுத்துச் சென்று கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பது தெரிய வந்தது.
இதையடுத்து காவல்துறையினர் இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட யசோதா மீது 15க்கும் மேற்பட்ட மதுபானங்கள் கடத்திய வழக்கும், சின்ன பாப்பா மீது 20-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் கடத்திய வழக்கும் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.