திருச்சி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் குறைந்து வரும் மது விற்பனைக்கு காரணம் மனமகிழ் மன்றம்
திருச்சி மாவட்டத்தில் மது விற்பனை திடீரென குறைந்ததால் டாஸ்மாக் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழக முழுவதும் டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில் மதுபான விற்பனையில் திருச்சி மாவட்டம் 15 வது இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த நிதியாண்டில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் விற்பனை குறைந்து 33வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் தொடர்ந்து இதுபோன்று விற்பனை சரிவை சந்தித்து வருகிறது திருச்சி மாவட்டம்.
இந்த மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 4ம் தேதி வரை தினமும் தலா 400 முதல் 500 பெட்டிகள் வரை விற்பனை குறைந்துள்ளது.
இதனால் திருச்சி மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மேலிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்துள்ளது. இதன் பின்னர் விற்பனை சரிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து ஆராய திருச்சி மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 5ம் தேதி திருச்சி மாநகர டாஸ்மாக் மதுபான கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இதில் மேற்பார்வையாளர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்களின் அடிப்படையில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே மதுபான விற்பனையை மீண்டும் தூக்கி நிமிர்த்த முடியும் என்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில்:-
மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கெடுபிடிகளை மீறி மதுபான விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக மதுபான பிரியர்கள் விரும்பி அருந்தும் முக்கிய பிராண்டுகள் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விற்பனைக்கு வருவதில்லை. டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையத்தில் பிரபல பிராண்ட் மதுபான வகைகள் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் எஃப்.எல் 3 எனப்படும் நட்சத்திர விடுதிகளில் உள்ள பார்களுக்கும் பிரபல பிராண்டுகளின் மதுபான வகைகள் வருவதில்லை.
குறிப்பாக தற்போது வெயில் காலம் என்பதால் பிரபல நிறுவனங்களில் பீர் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. ஆனால் இந்த பிரபல நிறுவனங்களின் மதுபானங்கள் எஃப் எல் 2 எனப்படும் மனமகிழ் மன்றங்களில் தாராளமாக கிடைக்கிறது.
இதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை. மதுபான கடைகளில் பிரபல நிறுவனங்களின் மதுபானங்கள் கிடைக்காததால் மதுபான பிரியர்கள் வேறு வழிகளை நாடி செல்கின்றனர்.
அடுத்த கட்டமாக டாஸ்மாக் மதுபான பார்களுக்கு அருகையே காவல்துறையினரின் கெடுபிடி அதிக அளவில் உள்ளது. பார்களில் குடித்துவிட்டு வெளியே வரும் நபர்களை கண்காணித்து ரோந்து வாகனங்கள் மூலம் பிடித்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஹெல்மெட் அணியாதது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது என பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனர்.
இதனால் மதுபான பிரியர்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் மனமகிழ் மன்றம் அருகே காவல்துறையினர் இதுபோன்று நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது. மனமகிழ் மன்றங்களை பெரிய பண முதலாளிகள் நடத்துகின்றனர். ஆகையால் காவல்துறையினர் அங்கு செல்வது கிடையாது.
அதேபோல் மனமகிழ் மன்றங்களின் உரிமையாளர்கள் டாஸ்மாக் மேலிடத்தில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி பிரபல நிறுவனங்களின் மதுபான வகைகளை வாங்கி அடுக்கி வைக்கின்றனர். முழு நேர மதுபான கடையாக மனமகிழ் மன்றங்கள் செயல்படக்கூடாது என்ற விதி இருந்தும் இந்த விதிமீறல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதோடு மனமகிழ் மன்றங்களில் போலி மதுபானம் ( கரூர் சரக்கு) விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. அவ்வப்போது புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.( சில மாதங்களுக்கு முன் அரியமங்கலத்தில் உள்ள மன மகிழ் மன்றத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கரூர் சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது ) ஆனால் போலி மதுபான விற்பனை என்பது சரளமாக நடைபெற்று வருகிறது. மேலும் டாஸ்மாக் கடை நேரத்தை விட கூடுதலாக இரண்டு மணி நேரம் காலை 11:00 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த மன மகிழ் மன்றங்கள்் செயல்படுகிறது இந்த காரணங்களால் தான்் டாஸ்மாக் மதுபான விற்பனை சரிவை சந்தித்துள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை குறைவதால் அரசுக்கு மட்டும் இழப்பீடு கிடையாது. அரசுக்கு மாதந்தோறும் பணம் செலுத்தி ஏலத்தில் எடுத்து மதுபான பார்களை நடத்தி வரும் உரிமையாளர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
போலீஸ் கெடுபிடி மற்றும் பிரபல பிராண்டுகள் இல்லாததால் மதுபான பிரியர்கள் பார்களுக்கு வராததால் அதன் உரிமையாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதில் பணியாற்றும் ஊழியர்களும் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆகவே இது போன்ற குறைபாடுகளை கலைந்தால் மட்டுமே திருச்சி மாவட்டத்தில் மதுபான விற்பனையை அதிகரிக்க முடியும் என்று அந்த மேற்பார்வையாளர் குறிப்பிட்டார்.