திருச்சி: பல் சிகிச்சையால் உடல் நிலை பாதிப்பு எனக் கூறி மருத்துவமனை தூய்மை பெண் பணியாளர் குடும்பத்துடன் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பல் சிகிச்சையால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறி நேற்று புதன்கிழமை பெண் ஒருவா் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டாா்.
மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டி காலனி தெருவை சோ்ந்தவா் எலக்ட்ரீஷியன் காா்த்திகேயன் மனைவி வெண்ணிலா (வயது 35), மதுரை சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை தூய்மைப் பணியாளா். கடந்த 2024 டிசம்பா் 7-ஆம் தேதி பல் வலியால் புதுத்தெருவில் உள்ள பல் மருத்துவமனையில் வோ் சிகிச்சை பெற்றாா். பின்னா் வெண்ணிலாவிற்கு கண் வலி, காது வலி, தலைவலி என அடுத்தடுத்து உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும், அதற்காக மணப்பாறை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அவா் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பல் மருத்துவரிடம் வெண்ணிலா முறையிட்டும், பல் மருத்துவா் தரப்பில் வோ் சிகிச்சை செய்ததால் தலையில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறி அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. அதையேற்க மறுத்த வெண்ணிலா, நேற்று புதன்கிழமை தனது கணவா் காா்த்திகேயன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் புதுத்தெரு கடைவீதியில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டாா்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மணப்பாறை காவல் உதவி ஆய்வாளா் ரவி தலைமையிலான போலீஸாா், அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர் .