கள்ளநோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய விசிக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (39). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர். இவருக்கு ராமநத்தம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கொட்டகை உள்ளது. அடிதடி வழக்கு தொடர்பாக செல்வத்தை தேடி கொட்டகைக்கு ராமநத்தம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சென்றனர்.
போலீசை கண்டதும் அங்கிருந்த கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து அந்த அறையை போலீசார் சோதனையிட்டனர். அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரம், துப்பாக்கிகள், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரை உள்ளிட்டவை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது செல்வத்தின் கொட்டகைக்கு வந்த திட்டக்குடி ஆலந்தூர் நவீன்ராஜ் (29), அதர்நத்தம் கார்த்திகேயன் (28) ஆகிய இருவரையும் சுற்றிவளைத்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர்.
அதில், கொட்டகையில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்டதும், இந்த கொட்டகை விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி செல்வத்துக்கு சொந்தமானது என்பதும், மேற்கண்ட 2 பேரும் செல்வத்திடம் டிரைவர்களாக வேலை செய்வதும் உறுதியானது. இதுதவிர கள்ளநோட்டு அச்சடிப்பு, புழக்கத்தில் விட்டது, தொடர்புடைய நபர்கள் யார், யார் என்பது தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து ரூ.85 ஆயிரம் கள்ளநோட்டுகள், 4 வாக்கி டாக்கிகள், 2 ஏர்கன், சொகுசு கார், 2 டிப்பர் லாரி, 1 பொக்லைன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் நவீன்ராஜ், கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம் உள்ளிட்ட மேலும் 10 பேரை பிடிக்க மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதனிடையே செல்வத்திற்கு சென்னையிலும் ஒரு தனியார் கம்பெனி உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கும் தனிப்படை போலீசார் சென்று சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கள்ளநோட்டு வழக்கு தொடர்பாக தனிப்படையினர், கள்ளக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் (26), திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பியான அரவிந்த் (30), அஜித் (24), மா.பொடையூர் கிராமத்தை சேர்ந்த வடிவேல்பிள்ளை (28) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர். இவர்களின் செல்போன்களை கைப்பற்றி தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செல்வத்தின் பாஸ்போர்ட், வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை முடக்கி, கள்ளநோட்டு முக்கிய புள்ளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செல்வம், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் மப்டியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்ட செல்வத்தின் கொட்டகை வீடு பூட்டு போடப்பட்டு, காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது..