எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் பல ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி உள்ளது .
எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் தமிழ் பட உலகில் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது.
அந்த சமயத்தில் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்தான் அது. 1967 ஆம் ஆன்டு ஜனவரி 12 ஆம் தேதி எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்ற எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை இருமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவரும் அதிர்ஷ்டவசமாக பிழைத்துக்கொண்டார்கள்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு எம்.ஆர்.ராதாவுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.எனினும் அவரது வயது காரணமாக அந்த தண்டனை 4 வருடங்களாக குறைக்கப்பட்டது. இந்த சம்பவம் அக்காலகட்டத்தில் கோலிவுட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக பார்க்கப்பட்டது.
எம்.ஆர்.ராதா, எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. எம்ஜிஆரை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்டாராம் எம்.ஆர்.ராதா. அதற்கு எம்ஜிஆர் ஒப்புக்கொள்ளாததால் சுட்டுவிட்டார் என்பது போன்ற செய்திகள் வலம் வருகின்றன. இந்த நிலையில் எம்ஜிஆருடன் பல காலம் மிகவும் நெருக்கமாக பழகியவரும் எம்ஜிஆரின் உதவி இயக்குனருமான துரைராஜ் என்பவர் சமீபத்தில் ஒரு தனியார் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .அப்போது அவர் எம்.ஆர்.ராதா எம்ஜிஆரை சுட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
ஒரு தயாரிப்பாளருக்கு 2 லட்ச ரூபாய் வட்டிக்கு கொடுத்தார் எம்.ஆர்.ராதா. ஒரு லட்ச ரூபாய் திரும்ப கொடுத்துவிட்டார். இன்னும் ஒரு லட்ச ரூபாய் தர வேண்டியது இருந்தது. ஆனால் தயாரிப்பாளரோ காலம் தாழ்த்தினார். இதனால் எம்.ஆர்.ராதா அந்த தயாரிப்பாளரை மிரட்டினார்.
ஆதலால் அந்த தயாரிப்பாளர் எம்ஜிஆரிடம் முறையிட, எம்ஜிஆர் எம்.ஆர்.ராதாவிடம், அந்த தயாரிப்பாளர் விரைவிலேயே பணம் தந்துவிடுவார், அவரை மிரட்ட வேண்டாம் என கூறினார்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் அந்த தயாரிப்பாளர் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த எம்.ஆர்.ராதா, 12 வருட பழைய குண்டுகளை தனது துப்பாக்கியில் பொருத்தி எம்.ஜி.ஆர் வீட்டிற்கு போனார். அவன் பணத்தை தர மாட்டிக்கான், நீதான் அவனுக்கு ஆதரவு தந்து பேசுனேல, நீ எனக்கு பணத்தை கொடு, அவன் கிட்ட அப்பறமா வாங்கிக்கோ என்று கோபமாக பேசினார். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றிப்போனது. அந்த சமயத்தில்தான் தனது வேட்டிக்குள் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எம்ஜிஆரை சுட்டார் எம்.ஆர்.ராதா” என்று அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் எம்ஜிஆரின் உதவி இயக்குனரான துரைராஜ்.