விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள பெரும்பாக்கம் சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து மயிலம் நோக்கிச் சென்ற சிறிய ரக லோடு வண்டியை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அதிகாரிகளை கண்டதும் வண்டி டிரைவர் தேள் கொட்டியது போல திறுதிறுவென முழித்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வண்டியை சல்லடை போட்டு தேடி பார்த்தனர்.

அதில் இரும்பு தடுப்பில் விநோத சத்தம் கேட்க அதை உற்று பார்த்த அதிகாரிகள் இருக்கு! எதோ ஒன்னு இருக்கு! என்பதை உணர்ந்தனர். புஷ்பா படப் பாணியில் லோடு வேனில் கட்டிங் ஒட்டிங் செய்து ரகசிய அறை அமைத்திருந்ததை கண்டுபிடித்தனர். . உள்ளே சோதனையிடப் புதுச்சேரி மதுபாட்டில்கள் 18 அட்டைப்பெட்டியில் சென்னைக்குக் கடத்தி செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த மரக்காணம் கரி பாளையத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர். வண்டியை காவல்நிலையம் எடுத்துச் சென்று அதிலிருந்த 350 புதுச்சேரி மதுபாட்டில்கள் மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். லோடு வண்டியில் ரகசிய அறை அமைத்து புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய சம்பவம் திண்டிவனம் அருகே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.