மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசிய ஆசிரியரை போலீசார் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சும்மா ஒரு கருத்து சொன்னதற்காக இப்படி செய்கிறீர்கள் என்றால் கருத்து சுதந்திரமே இல்லையா என்று அவரது மகள் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆளும் தி.மு.க மற்றும் எதிர்கட்சிகள் அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது இருக்கும் இரு மொழி கொள்கையே போதும், மும்மொழி கொள்கை தமிழகத்தில் சரியாக இருக்காது என்று கூறி வருகின்றனர். ஆனால் தமிழக பா.ஜக மட்டும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறது.
இதன் காரணமாக தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், மும்மொழி கொள்கையை ஒப்புக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு கல்வி நிதி அளிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான பெரிய விவாதமும் நடைபெற்றது.
இந்நிலையில், சேலத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கருத்து கூறிய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தில், சின்னகொள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கலியுக கண்ணன். சேலத்தில் டுட்டோரியல் நடத்தி வரும் இவர் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியும் அளித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 6-ந் தேதி மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தனது சமூகவலைதள பக்கததில் கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் தனது பதிவில், வேலை வாய்ப்புக்கான திறமையை வளர்த்துக்கொள்ள 10 மொழிகளை கூட கற்றுக்கொள்ளலாம் தவறே இல்லை என்றும், இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிய கருத்து, மும்’மொழி கொள்கையை எப்போது ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்தை ஒப்பிட்டு பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் கூறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக, சேலம் மாநாகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் கீதா அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிரியர் கலியுக கர்ணனை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
இது குறித்து செய்தியளார்கள் சந்திப்பில் பேசிய கலிய கண்ணனின் மகள், அப்பாவை கைது செய்த போலீசார் செல்போனை வாங்கி உடைத்துவிட்டனர். இதுவா ஜனநாயகம். மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டதால் அவரை கைது செய்திருக்கிறார்கள். அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக சொல்லியும் அவரை அடித்து இழுத்து சென்றார்கள். சந்திரபாபு நாயுடு 10 மொழிகளை கற்கலாம் என்று சொன்னதை ஆதரித்து ஸ்டாலின் சொன்னதுக்கு எதிராக இவர் கருத்து தெரிவித்தார்.
இது ஜனநாயக நாடா என்று எனக்கு தெரியவில்லை. எங்க அப்பாவை இப்படி கைது செய்து அழைத்து சென்றுவிட்டார்கள். அவரை நம்பி எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள். சும்மா சின்னதா ஒரு கருத்து சொன்னால் கூட கைது செய்வார்கள் என்றால், இங்கு கருத்து சுதந்திரமே இல்லையா? இதில் பெரியார் மண்ணு அது இது என்று வேற என ஆவேசமாக பேசியுள்ளார்.