திருச்சி ஆசிரியை ஏற்காட்டில் காதலனால் விஷ ஊசிப் போட்டு கொலை செய்த பரபரப்பு அடங்குவதற்குள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெப்படையில் இளம்பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுக்கபட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து வெப்படை போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்தனர். பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த சித்ரா (வயது 27) என்பது தெரியவந்தது. அவருடன் தங்கியிருந்த நபர் குளித்தலையை சேர்ந்த அருள்பாண்டியன் (வயது 35) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அருண்பாண்டியனை பிடிக்கும் பணியில் இறங்கினர். வெப்படை அருகே உப்புபாளையம் பகுதியில் பதுங்கி இருந்த அருள்பாண்டியனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
கொலை சம்பவம் தொடர்பாக அருள்பாண்டியன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.”கரூர் மாவட்டம் குளித்தலை தான் எனக்கு சொந்த ஊர். கருத்து வேறுபாடு காரணமாக எனது மனைவி என்னை பிரிந்து சென்றுவிட்டார். அதேப்பகுதியை சேர்ந்த சித்ராவும் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். நாங்கள் இருவரும் குளித்தலை பகுதியில் வேலைக்கு செல்லும் போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்தப்பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நாமக்கல் பகுதியில் உள்ள நூர்பாலைக்கு இருவரும் வந்தோம். வெப்படை சந்தைப்பேட்டையில் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தோம்.
இந்நிலையில் நூர்பாலையில் வேலை பார்க்கும் ஒருவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் நெருங்கிப்பழகினார். இது எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. அந்த நபருடன் பழகுவதை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்தேன். நான் சொல்வதை சித்ரா காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்தாள். அதை நான் கண்டித்ததால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு எங்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான் கத்தியை எடுத்து சித்ராவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், அருள்பாண்டியனை குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.