Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்ஸ்டாகிராம் பழக்கம் : விஷ ஊசி போட்டு திருச்சியை சேர்ந்த 31 வயது காதலியை கொலை செய்த 22 வயது காதலன் 2 காதலியுடன் கைது.

0

'- Advertisement -

சேலத்தில் விஷ ஊசி போட்டு காதலியை கொலை செய்து ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசி எறிந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர், 2 காதலிகளுடன் கைது செய்யப்பட்டார்.

 

சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அப்பெண்ணை கடந்த 4 நாட்களாக காணவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆன நிலையில் அவர் எங்கு போனார் என்பது தெரியாமல் இருந்தது. இதையடுத்து விடுதி வார்டன், பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

அதில், மாயமான இளம்பெண் செல்போனுக்கு, திருச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அழைத்தது பதிவாகியிருந்தது. மேலும் அப்பெண்ணின் செல்போன் ஏற்காடு மலைப்பாதையுடன் சுவிட்ச் ஆப் ஆனதும் தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண்ணுடன் பேசிய திருச்சி வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மாயமான பெண்ணை கொலை செய்து ஏற்காடு 60 அடி பாலம் அருகே 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து, பள்ளப்பட்டி மற்றும் ஏற்காடு போலீசார், வாலிபர் குறிப்பிட்ட 20 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண் சடலத்தை நேற்று மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த வாலிபரிடம் ஏற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட இளம்பெண்.

திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்த முதுகலை பட்டதாரியான லோகநாயகி (எ) அல்பியா (வயது 31). இவருக்கும், பெரம்பலூர் அருணாச்சல கவுண்டர் நகரை சேர்ந்த பி.இ நான்காம் ஆண்டு படித்து வரும் அப்துல் ஹபீஸ் (வயது 22) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 4 ஆண்டாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலுக்காக லோகநாயகி, மதம் மாறி அல்பியா என பெயர் வைத்துக் கொண்டார்.

 

அல்பியா கடந்த 2023ம் ஆண்டு சேலம் வந்து தனியார் விடுதியில் தங்கியிருந்து ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.

 

அவரது காதலன் அப்துல் ஹபீஸ், அவ்வப்போது விடுமுறை நாட்களில் சேலம் வந்து அல்பியாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனிடையே அப்துல் ஹபீஸ், சென்னை ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் காவியா சுல்தானா (வயது 22) என்பவருடன் பழகியுள்ளார். இதை அறிந்த அல்பியா, காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். தன்னைத் தவிர வேறு யாரையாவது திருமணம் செய்தால், உன்னையும், உனது குடும்பத்தையும் கொல்லாமல் விட மாட்டேன் என அல்பியா மிரட்டல் விடுத்துள்ளார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் ஹபீஸ் தனது புது காதலி காவியா சுல்தானாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதன்பின் அல்பியாவை கொலை செய்ய புது காதலியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். இதற்கு உடந்தையாக இருக்க தனது முதல் காதலியான மருத்துவ கல்லூரி மாணவி மோனிஷாவிடம் (வயது 22) பேசியுள்ளார். மோனிஷாவிடம் தனது உறவினர் பெண்ணின் சகோதரரை அல்பியா திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவரை பாட்டிலால் அடித்து கொலை செய்து விட்டார். எனவே அல்பியாவை பழி வாங்க வேண்டும். அவரை கொல்ல நீ உதவி செய்ய வேண்டும் என ஒரு கட்டுக்கதையை கூறி மோனிஷாவை மூளை சலவை செய்து சம்மதிக்க வைத்துள்ளார்.

 

அதன்படி கடந்த 1ம் தேதி அப்துல்ஹபீஸ், மோனிஷா, காவியா சுல்தானா ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் சேலத்துக்கு வந்தனர். பின்னர், அங்கிருந்து வாடகைக்கு டிரைவர் இல்லாமல் காரை மட்டும் எடுத்துக்கொண்டு, அல்பியா தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்று, விடுதியில் இருந்த அல்பியாவை வெளியே வரவழைத்துள்ளனர். அவரிடம் தனது காதலிகள் 2 பேரையும், தனது தோழிகள் என அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர், அல்பியாவை காரில் அழைத்துக் கொண்டு ஏற்காடு போவோம் எனக்கூறி சென்றுள்ளார்.

 

மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே வந்தவுடன் காவியா சுல்தானா, அப்துல் ஹபீஸ் ஆகிய இருவரும் திடீரென அல்பியாவை பிடித்துக் கொண்டனர். அப்போது மோனிஷா அல்பியா உடலில் விஷ ஊசியை இருமுறை போட்டுள்ளார். இதனால் அல்பியா இறந்துள்ளார். பின்னர் அல்பியாவின் உடலை 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு மூவரும் காரில் தப்பி சென்றது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அப்துல் ஹபீஸ், காவியா சுல்தானா, மோனிஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

தற்போது தமிழகத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம் பெண்களை ஏமாற்றி ( கற்பழிப்பு, கொலை ) வரும் செயல்கள் அதிகரித்து வருகிறது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.