திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு.
164 பயணிகள் தவிப்பு.
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஓமன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று (05-03- 2025) அதிகாலை 3.30 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு 164 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 164 பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு காத்திருப்போர் அறையில் அமர வைக்கப்பட்டனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் கோளாறை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இருந்தாலும் தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் விமான நிலையத்தில் தவித்தனர். அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்றவை விமான நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது. அவர்கள் இன்று மாலை மாற்று விமானம் மூலம் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் கிளம்பிய பின்பு கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் 164 பயணிகளின் நிலை ஆபத்தாகி இருக்கும் . முன்னதாகவே கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 164 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர் .