கர்நாடகவில் உள்ள மகாவிஷ்ணு சிலைக்கு, திருச்சியில் இருந்து, 45 அடி நீளம் கொண்ட மெகா சைஸ் வெட்டிவேர் மாலை அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி: கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலைக்கு, திருச்சியில் இருந்து, 45 அடி நீளம் கொண்ட மெகா சைஸ் வெட்டிவேர் மாலை அனுப்பி வைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஏஜிபுராவில் கோதண்டராமசாமி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோயிலில் திருவண்ணாமலையில் இருந்து எடுத்து செல்லப்பட்ட ஒரே கல்லிலான 108 அடி உயரம் கொண்ட மகாவிஷ்ணு சிலை அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி இக்கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
அதையடுத்து, பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலைக்கு ராமேஸ்வரத்தில் உள்ள வெட்டிவேர் சங்கம் சார்பில், 45 அடி நீளம் கொண்ட வெட்டிவேர் மாலை தயாரிக்கப்பட்டது.
மொத்தம் அரை ஏக்கர் பரப்பளவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வெட்டி வேரை கொண்டு, 8 பேர் கொண்ட தொழிலாளர்கள் குழு தொடர்ந்து 15 நாள்கள் உழைத்து, அழகிய மெகா சைஸ் மாலையை உருவாக்கி உள்ளனர்.
மருத்துவ குணம் மற்றும் மயக்கும் மணம் கொண்ட இந்த வெட்டிவேர் மாலையின் மதிப்பு, சுமார் 57 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
திருச்சி திருவெறும்பூர் கணேசபுரத்தில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் மூன்று நாட்கள் வைத்து பூஜிக்கப்பட்ட வெட்டிவேர் மாலையை, திருவெறும்பூர் மற்றும் இந்த பகுதி சுற்றியுள்ள கிராம மக்கள் வெட்டிவேர் மாலையை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து வெட்டிவேர் மாலை, உரிய பாதுகாப்புடன் கர்நாடகாவில் உள்ள கோதண்டராமசாமி கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.