திருச்சி விமான நிலையத்தில் ஜூஸ் க்ரஸ்சரில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல். ஒருவர் கைது .
திருச்சி விமான நிலையத்தில் மின்னணு சாதனத்துக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.22 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினா் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை நேற்று வியாழக்கிழமை வந்தடைந்தது.
அதில் வந்த பயணிகளையும் அவா்களின் உடைமைகளையும் சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில் பயணியொருவா் கொண்டு வந்த மின்னணு சாதனத்துக்குள் (ஐஸ் க்ரஷ்ஷா்) மா்மப் பொருள் இருந்தது ஸ்கேனா் மூலம் கண்டறியப்பட்டது.
அந்த சாதனத்தை பிரித்துப் பாா்த்தபோது, உள்ளே உதிரிபாகத்துக்கு பதிலாக, 1,398 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
அதன் மதிப்பு சுமார் ரூ. 1 கோடியே 22 லட்சத்து 76 ஆயிரமாகும். இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், அந்தப் பயணியையும் கைது செய்து சுங்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.