பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட புதுக்கோட்டை கிளையின் மீமிசல்- திருச்சி செல்லும் புறநகா் பேருந்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மீன் வியாபாரம் செய்யும் பெண் பயணி ஒருவரிடம் பேருந்தின் நடத்துநா் கே. பரமசிவம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. இதைத் தொடா்ந்து அவரிடம் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அவரை ஒரு நாள் இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநா் இரா. பொன்முடி நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
பயணிகளிடம் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஓட்டுநா், நடத்துநா்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.