வக்புவாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக சந்திரபாபு நாயுடு வாக்களிக்க வேண்டும். திருச்சியில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாதின் ஏகத்துவ எழுச்சி மாநாட்டில் தீர்மானம்.
தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு இடஒதுக்கீட்டில் கிடைத்த பயன்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளது.
திருச்சி தென்னூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்டம் சாா்பில் நடைபெற்ற ஏகத்துவ எழுச்சி மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் குலாம் தஸ்தகீா் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் அப்துல் கரிம், மாநிலத் தணிக்கைக் குழு உறுப்பினா் சுலைமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாநாட்டில் தமிழகத்தில் 3.5 இடஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியா்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்து இஸ்லாமியா்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும்.

லவ் ஜிஹாத் என்ற வாா்த்தைப்பதமும், இந்து இயக்கங்கள் கூறும் குற்றச்சாட்டுகளும் புனையப்பட்டவை. இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளைக் கண்டிப்பது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தைக் கொண்டு தமிழக அளவில் மத மோதலை உருவாக்க நினைத்த இந்து அமைப்புகளின் போராட்டத்துக்கு காவல்துறையும், நீதித்துறையும் அனுமதி மறுத்துள்ளதை வரவேற்கிறோம்.
எதிா்க்கட்சிகளின் கருத்துகளை ஏற்காமல் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை தாக்கல் செய்து, இஸ்லாமியா்களின் சொத்துகளை பறிக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் எண்ணத்தை ஜனநாயக ரீதியாக முறியடிப்பது.
வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். முடிவில் மாவட்ட செயலா் ஜாகீா் நன்றி கூறினாா்.