நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் திரைவிமர்சனம் .2 நாள் வசூல்…
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தின் விமர்சனம்.
இந்தப் படத்தில் கவுண்டமணி, யோகிபாபு, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், C.ரங்கநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கவுண்டமணியின் மனைவியாக ராஜேஸ்வரி நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்தி & பிந்து, மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி & சாய் தான்யா, நாகேஷின் பேரன்- கஜேஷ் & அபர்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.
இது தவிர, சிங்கமுத்து, தாரணி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காயத்ரி, லேகாஶ்ரீ, மிலிட்டரி கதாபாத்திரத்தில் இயக்குநர் சாய் ராஜகோபால் டி.எஸ்.ஆர்.சீனிவாசன், சென்றாயன், கூல் சுரேஷ், சதீஷ் மோகன், காதல் சுகுமார், சிசர் மனோகர், ஆதேஷ் பாலா, மங்கி ரவி, பெஞ்சமின், கொட்டாச்சி, விஜய கணேஷ், ‘லொள்ளு’ பழனியப்பன், நளினி சாமிநாதன், மணவை பொன் மாணிக்கம், பத்மநாபன், குணாஜி, காஞ்சிபுரம் பாய், கண்ணதாசன், மதுரநாயகம் ‘போண்டா’மணி, சின்ராசு, அனுமோகன், ரேவதி, மணிமேகலை, RDS சுதாகர், மற்றும் மதுரை நண்பேண்டா அட்மின் டெம்பிள் சிட்டி குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் – ஹெக்டர் ஸ்ரீதர், கலை இயக்கம் – மகேஷ் நம்பி, படத் தொகுப்பு – ராஜா சேதுபதி, புரொடக்ஷன் மேனேஜர் – ராஜன், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன், ஸ்டில்ஸ் – விஜய், இணை தயாரிப்பு : திரு.கோவை லட்சுமி ராஜன்.
முழு நேர அரசியல்வாதியான கவுண்டமணி அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் தன் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்த்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குநர் சாய் ராஜகோபால், குடும்பத்துடன் கண்டு களிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இதை இயக்கியிருக்கிறார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த காமெடி கிங் கவுண்டமணியை முன்னிலைப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. அதுவே இந்த படத்தின் மைனஸ் ஆகவும் மாறிவிட்டது.
கவுண்டமணி காமெடி நடிகர் என்ற நிலையில் இருந்து விலகி பல வருடங்கள் ஓய்வில் இருந்தார். அதற்கு பின்பு சில திரைப்படங்களில் தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது கடைசியாக எந்த படத்தில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருவது போல கதை அமைத்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.
‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்னும் கவுண்டமணி ‘சித்தப்பா பெரியப்பா மக்கள் கட்சி’ என்கின்ற ஒரு கட்சியில் மாவட்ட செயலாளர். அவர் ஒரு சட்டமன்றத் தேர்தலில் நின்று ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியதால் அவடைய பெயர் ஒத்த ஒட்டு முத்தையாவாக மாறிவிட்டது.
அவருக்கு மூன்று தங்கைகள். அந்த மூன்று தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலைமை ஆனால் கவுண்டமணி இதில் ஒரு நிபந்தனையை விதிக்கிறார். யாருடைய வீட்டில் மூன்று மாப்பிள்ளைகள் கிடைக்கிறார்களோ அந்த ஒரே வீட்டில் மூன்று தங்கைகளையும் திருமணம் செய்து கொடுத்து விடுவோம் என்கிறார் கவுண்டமணி. இதற்கு ஒத்து வராத எந்த ஒரு வரனையும் அவர் ஏற்க மறுக்கிறார்.
ஆனால் அவருடைய தங்கைகளோ ஆளாளுக்கு ஒருவரைக் காதலிக்கிறார்கள். கடைசியாக இந்த மூன்று பேருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று அண்ணன் கவுண்டமணியிடம் பொய் சொல்லி பெண் பார்க்க ஏற்பாடு செய்ய வைக்கிறார்கள்.
மாப்பிள்ளைகளின் புகைப்படம் மாறியதால் ஒரு திருட்டு குடும்பமும் இதில் உள்ளே நுழைந்து நாங்கள்தான் முதலில் பெண் பார்க்க வந்தோம். எங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் தங்கைகளைக் கொடுங்கள் என்கிறார்கள்.
இதற்கு அடுத்ததாக மகள்கள் காதலித்துக் கொண்டிருக்கும் பசங்கள், தங்களுடைய தாய், தந்தையாக ஒரு ஜோடியை அழைத்து வந்து எங்களுக்கு உங்களது தங்கைகளை திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.
இதற்கு மேல் கவுண்டமணி என்ன செய்தார்.. யாருக்கு தன் தங்கைகளை திருமணம் செய்து கொடுத்தார்… என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

கவுண்டமணியின் மிகப் பெரிய பலமே அவருடைய பேச்சுதான். எப்போதும் மிகவும் சவுண்டாகவே பேசி பழகிவிட்ட கவுண்டமணி அந்தப் பேச்சிலேயே கிண்டல், நக்கல், நையாண்டி, கேலி, குத்தல் என்று பலவித பகடிகளையும் சேர்த்து வைத்து பேசுவார். அதுதான் தமிழ் சமூகத்திற்கு கவுண்டமணி மீது ஒரு மிகப் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஆனால் இப்போது இந்த முத்தையா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய 75 ஆவது வயதில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. நடப்பதற்கே சற்று சிரமப்படுவது தெளிவாக தெரிகிறது. அதோடு அவருடைய டிரேட் மார்க் நக்கல் வசனங்களும், வசன உச்சரிப்புகளும்.. கேலி, கிண்டல், உள் குத்துக்கள் எல்லாமே இந்தப் படத்தில் இருந்தாலும், ஒரு சில இடங்களில் மட்டும்தான் நமக்கு சிரிப்பு வந்திருக்கிறது.
அதிலும் 75 வயது முதியவருக்கு 25 வயது பெண்கள் தங்கைகள் என்று சொன்னதெல்லாம் மன்னிக்கவே முடியாத குற்றம். கவுண்டமணி எப்போதும் தான் ஹீரோவாகத் தான் நீ நடிப்பேன் என்று ஒற்றை காலில் நின்று கொண்டிருக்கிறார். அது 1980-களுக்கு ஓகே. ஆனால், இது 2கே கிட்ஸ்கள் உலவுகின்ற இடம். இந்த இடத்திலும் அப்படியேதான் இருப்பேன் என்றால் அவரைப் பற்றி அதிகம் தெரியாத இப்போதைய இளசுகளுக்கு எப்படி அவர் மீது ஒரு ஈர்ப்பு வரும்.
அந்த அண்ணன் தங்கை என்ற உறவுகளே கேள்விக்குறியாகிவிட்டதால் அதற்கு மேல் நம்மால் அந்த இரண்டு கதாபாத்திரங்களுடனும் ஒன்ற முடியவில்லை. ஆனாலும் அதையெல்லாம் கவுண்டமணிக்காக மன்னித்து விட்டு அடுத்தடுத்து திரைக்கதையில் கவுண்டமணி என்னவெல்லாம் செய்கிறார் என்பதை பார்ப்போம் என்று உட்கார்ந்தால் அதற்கும் நமக்கு மிகப் பெரிய ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது.
கவுண்டமணியின் நடை, உடை, பாவனை எல்லாம் ஒரு வயதான ஒரு மனிதரை ஏன் இப்படி இம்சை பண்ணுகிறீர்கள் என்று நம்மை சொல்ல வைத்திருக்கிறார்கள்.
மூன்று தங்கைகளாக நடித்தவர்களும், தங்கைகளின் காதலனாக நடித்தவர்களும் மற்ற துணை கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை பேருமே மிக சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். நடித்திருக்கிறார்கள்.
அதிலும் யோகி பாபு கவுண்டமணியோடு நடித்தே தீருவேன் என்று தன்னுடைய சபதத்தை இந்த படத்தில் நிறைவேற்றியிருக்கிறார். அவரும் பரவாயில்லாமல் நடித்து தன்னுடைய கேரக்டரை மட்டும் காப்பாற்றி இருக்கிறார்.
கவுண்டமணியும், யோகிபாபுவும் காரில் வரும் பொழுது பேசுகின்ற அந்த சின்ன சலசலப்பு பேச்சுக்கள் கொஞ்சம் சுவையாக ரசிக்க வைத்திருக்கின்றன.
இன்னொரு பக்கம் சிங்கமுத்துவுக்கும், காயத்ரிக்கும் இடையிலான அந்த உறவு இல்லிகளாக இருந்தாலும் ஒரு பக்கம் நகைச்சுவையை தந்திருக்கிறது.
ரவி மரியாவின் இல்லீகல் கனெக்சன் காமெடியும், சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரனின் கட்சி நடத்தும்விதம் பற்றிய காட்சிகளும், கவுண்டமணியின் வீட்டுக்குள் நடக்கும் அக்கப்போர்களும் நகைச்சுவையைக் கூட்டியிருக்கின்றன.
ஒரே வீட்டுக்குள் இருக்கின்ற இரண்டு அணிகளின் குளறுபடிகள் பற்றிய காட்சிகளை நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்போம். அதே மாதிரியான திரைக்கதைகளில் இடைவேளைக்கு பின்பு நம்மைக் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
தொழில் நுட்பத்தில் ஒளிப்பதிவும் இசையும் சிம்ப்ளி சூப்பர் என்று சொல்லலாம். ஒளிப்பதிவு முதல் கட்சியிலிருந்து கடைசி வரையில் ஒரே மாதிரி தரமானதாகவே அமைந்திருக்கிறது பாராட்டுக்கள்.
இசையும், பின்னணி இசையும் ஓகே என்று சொல்லுகின்ற அளவுக்கு அமைந்திருக்கிறது. ராஜமுந்திரி அழகி நான் என்ற பாடலும், அந்தப் பாடலை பாடமாக்கிய விதமும் கவர்ச்சியை கூட்டியிருக்கிறது.
ஒட்டு மொத்தமாய் ஒரு படமாக பார்க்க போனால் இந்தப் படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் இன்றைய அரசியலை அக்குவேறு ஆணிவேராக பீஸ் பீசாக்கி இருப்பதுதான்.
கூவத்தூரில் நடத்த காமெடியை இந்த படத்தில் இணைத்து இருக்கிறார்கள். ஓபிஎஸ் ஜெயலலிதா சமாதியில் நடத்திய தர்ம யுத்தத்தை கிழித்து எடுத்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் திமுக, அண்ணா திமுக, மத்திய அரசு என்றில்லாமல் அனைத்து அரசியல் வியாதிகளையும் நகைச்சுவை அடுப்பில் போட்டு வறுத்து எடுத்து இருக்கிறார் இயக்குநர்.
உண்மையில் இது மாதிரியான வசனங்களை தைரியமாக பேசுவதற்கு ஒரு தில்லு வேண்டும். அது கவுண்டமணிக்கு நிறையவே இருக்கிறது. இதற்கு முன்பாக இந்த அளவுக்கெல்லாம் இந்த காலத்தில் யாரும் தைரியமாக விமர்சிக்க மாட்டார்கள். ஆனால் நடுநிலைமையோடு விமர்சித்து தள்ளியிருக்கிறார் கவுண்டமணி. அதிலும் அவரே பேசுகின்ற பல பேச்சுக்கள் இன்றைய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மத்திய ஆளும் கட்சியையும் சேர்த்து வாரி விட்டிருப்பது பாராட்டுக்குரியது.
மொத்தமாய் பார்க்க போனால் இந்தப் படம் ஓவர் சிரிப்பாக இல்லாமலும், சிரிப்பே வராத அளவுக்கும் இல்லாமல்… ஒரு மிடில் கிளாஸ் சிரிப்பை மட்டுமே நமக்கு கொடுத்திருக்கிறது. ஆனால், இறுதிவரை படத்தைப் பார்க்க வைத்திருப்பதால் இயக்குநரை நாம் கொஞ்சமேனும் பாராட்டலாம்.
குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வெளியான இரண்டு நாளில் ரூ.40 லட்சம் வசூல் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றது .