நடிகர் கஞ்சா கருப்பு போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரூ.2.50 லட்சம் சம்பளம் பெறும் அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வராமல் தனியாக மருத்துவமனை தொடங்கி அதற்கு முக்கியத்துவம் தந்து வருகின்றனர் , அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை மதிப்பதே இல்லை எனக் கூறி வீடியோ ஒன்றை மருத்துவமனையில் இருந்தே வெளியிட்டு இருந்தார் .
இதற்கு தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் பதிலளித்தார். பாஜகவும் அமைச்சரின் பதிலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
போரூர் அரசு மருத்துவமனைக்கு தனது மகனின் காது வலி பிரச்சனைக்கு சிகிச்சை பெறுவதற்காக நடிகர் கஞ்சா கருப்பு காலை 10 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அவர் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். பெயருக்கு முன்பு நல்ல எந்தவொரு அடையாளத்தையாவது சொல்லலாம். அவர் தனது மகனுக்கு சிகிச்சை மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் அனைவரும் உள்ளே இருந்துள்ளனர். ஆனால், அவர் பேட்டியில் இந்த மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லை. செத்துப்போன பிணங்களுக்கு மருத்துவம் பார்க்கிறார்கள் என்று சினிமா வசனத்தைக் கூறியுள்ளார். உடனடியாக சென்னை மேயர் சமூக வலைதளத்தின் மூலமாக விடுமுறை நாளாக இருந்தாலும்கூட எத்தனை மருத்துவர்கள் இருந்தார்கள். எத்தனை ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர் என்ற தகவல்களை தெளிவாக கூறியுள்ளார். இத்துடன் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று கருதுகிறேன். இதற்கு மேல் கிளறினால் கஞ்சா கருப்புக்குத் தான் பாதிப்பு என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பொதுவெளியில் பகிரங்கமாக மிரட்டும் உங்களது ஆணவப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது அமைச்சரே தமிழக பாஜக கூறியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் சரியான நேரத்திற்கு மருத்துவர்கள் பணிக்கு வருவதில்லை என்பதையும், அதனால் நோயாளிகள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியவர்களை பொதுவெளியில் பகிரங்கமாக மிரட்டும் உங்களது ஆணவப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது அமைச்சரே.
அந்தக் குறிப்பிட்ட நடிகர் நாடகமாடுகிறார் என்று கூறும் நீங்கள், காலை முதல் பல மணி நேரம் காத்திருக்கிறோம் ஆனால் எந்த மருத்துவர்களும் இன்னும் வரவில்லை எனக் கொந்தளிக்கும் பொதுமக்களுக்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்? அவர்களும் பொய் கூறுகிறார்கள் என்று பழி சுமத்துவீர்களா? அங்கு அனைத்து மருத்துவர்களும் பணியில் இருந்தது உண்மையெனில், மருத்துவர் எங்கே என்ற பொதுமக்களின் கேள்விகளுக்கு அந்த மருத்துவமனையின் அட்மின் அலுவலர் எதற்கு திக்கித் திணறி அமைதி காக்க வேண்டும்?
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மகத்தான மருத்துவமனை” என்று வீர வசனம் பேசும் நீங்கள், தமிழகத்தில் எத்தனை அரசு மருத்துவமனைகள் அனைத்து வசதிகளுடனும் மருத்துவர்களுடனும் தரமாக இயங்கி வருகிறது என்ற தரவுகளை வெளியிட முடியுமா? இன்றும் தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் குடிநீர் முதலிய பல அடிப்படை வசதிகள் இல்லை என்பதையும், பல வார்டுகளின் மேற்கூரைகள் ஒழுகுவதையும், பல மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவுகளில் தெரு நாய்கள் உலாவுவதையும், டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சைகள் அளிக்கப்படுவதையும் நீங்கள் மறந்துவிட்டீர்களா? இதுபோன்ற உங்கள் நிர்வாகத் தவறுகளை நாங்கள் விடாது கிளறிக் கொண்டே தான் இருப்போம், என்ன செய்வீர்கள் அமைச்சரே?
உங்கள்
திமுக குண்டர்களைக் கொண்டு கொலை மிரட்டல் விடுவீர்களா? அல்லது போலி வழக்குகளைப் போட்டு எங்கள் குரல்வளையை நெரித்துவிடுவீர்களா? என்ன செய்வீர்கள்? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளளது.