திருச்சி: 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிந்த ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 4 பேர் கைது .
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி வகுப்பறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ தனியார் பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர்.
மணப்பாறையில் உள்ள ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பள்ளிதாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியின் போது வகுப்பறையிலேயே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றவுடன் தனது பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தினர்.
தாளாளரின் கணவர் வசந்தகுமாரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த நிலையில், தாளாளர் மற்றும் முதல்வரை கைது செய்யக்கோரி மாணவியின் உறவினர்கள் திருச்சி – திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
மணப்பாறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பள்ளி தாலாட்டு சுதா அவரது கணவர் வசந்தகுமார் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஸ்ரீ குரு வித்யாலயா தனியார் பள்ளியை மூட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளியை தொடர்ந்து செயல்பட விட மாட்டோம் என்றும் சிறுமியின் உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளனர்.