காதலனுடன் லிவிங் டுகெதர்… ரவுடியுடன் கல்யாண வாழ்க்கை… தந்தை, மகனுடனும் உல்லாசம் என கள்ளக்காதலியின் அடங்காத ஆசையால் ஒரு உயிர் பறிபோய் உள்ளது.
சினிமாவை மிஞ்சம் வகையில் நடந்து உள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் வீராணம் பக்கமுள்ள வீமனூர் காட்டுவளவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் குமரவேல் (வயது 29). டிரைவரான இவர் கடந்த திங்கள்கிழமை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி பிரகாஷ், அவரது கூட்டாளிகள் மாணிக்கம், கனகராஜ் ஆகியோரை வீராணம் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடியுடன் சேர்ந்து காதலனை காதலி தீர்த்துக்கட்டியது அம்பலமானது.
போலீஸ் விசாரணையில் பிரகாஷ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
வீராணம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி (வயது 42). இவருக்கும் தாதகாபட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். வசந்தியின் தவறான நடவடிக்கையால் ரமேஷ் பிரிந்து சென்றுவிட்டார். வசந்தி ஏலச்சீட்டு நடந்தி வந்ததால் கைநிறைய பணம் கிடைத்தது. இதனால் ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அப்போது பலருடன் வசந்திக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் கொலையான குமரவேலின் தந்தை மோகனுடன் நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் குமரவேலுவுடனும் பழக்கம் ஏற்பட்டது. தந்தை, மகன் என இருவருடனும் அவர் ஜாலியாக இருந்து வந்தார். அந்தநேரத்தில் குமரவேலுக்கு திருமணமும் நடந்தது.
‘என்னுடன் இருக்க வேண்டுமானால், மனைவியை விட்டு பிரிந்து வா’ என குமரவேலுக்கு வசந்தி ஆசை வார்த்தை கூறினார். இதனால் தாலி கட்டிய மனைவியை ஒரு மாதத்திலேயே விரட்டி விட்டு, 40 வயதான வசந்தியுடன் அவர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார். கேட்கும் போதெல்லாம் பணம் கொடுப்பதால் குமரவேலுவும் வசந்தியே தன் வாழ்க்கை என மூழ்கினார். இதற்கிடையே ஆள்விட்டு ஆள் தாவும் வசந்திக்கு ரவுடி பிரகாசுடன் பழக்கம் ஏற்பட்டது. பிரகாசுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். என்றாலும் இவரால் வசந்தியை மறக்க முடியவில்லை. கேட்கும்போதெல்லாம் பணம் கொடுப்பதோடு, நகையும் வாங்கி கொடுத்து அழகு பார்த்துள்ளார். இதனால் வசந்தியை பிரகாஷ், 2வதாக திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
வசந்தியால்தானே கட்டிய மனைவியை விரட்டி விட்டேன். இப்போது என்னை தூக்கி எறிந்துவிட்டு, பிரகாசுடன் சென்றுவிட்டாளே என குமரவேல் மிகுந்த வேதனை அடைந்தார். தனது செல்போன் எண்ணையும் பிளாக் செய்துவிட்டாளே என குமுறினார். குமரவேலும், வசந்தியும் மிகவும் நெருக்கமாக இருக்கும் போது எடுத்த வீடியோவும் குமரவேலுவிடம் இருந்தது. அதே நேரத்தில் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை செல்போன் டிபியில் வைத்தார். இதனை பார்த்த வசந்தியும், பிரகாசும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக படத்தை எடுத்துவிடு என வசந்தி கூறியுள்ளார். பிரகாசும் மிரட்டினார்.
உன்னால்தானே என் வாழ்க்கையே போனது. தற்போது நடுரோட்டில் நிற்கிறேன் என குமரவேல் வசந்தியிடம் குமுறியுள்ளார். படத்தை எடுக்க மாட்டேன், மேலும் என்னிடம் நமது அந்தரங்க வீடியோவும் உள்ளது. இந்த வீடியோவையும் நான் அழிக்க மாட்டேன் என உறுதியுடன் கூறியதுடன், நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக வெளியிடுவேன் எனவும் கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த வசந்தி, பிரகாசிடம் கூறி, தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் குமரவேலை தீர்த்துக்கட்டினால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என கூறியுள்ளார். இதையடுத்து குமரவேலை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிரகாஷ் நண்பர்கள் 2 பேரை அழைத்துச் சென்று, சமயம் பார்த்து குமரவேலை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரிடம் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு சென்ற பிரகாஷ், அதனை அங்குள்ள கிணற்றில் வீசியுள்ளார். இவ்வாறு பிரகாஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பிரகாஷ், கள்ளக்காதலி வசந்தி, மாணிக்கம், கனகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செல்போனை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் சினிமாவை மிஞ்சும் காட்சிகளும் இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. மருதமலை சினிமாவில், ஒரு பெண்ணுக்கு 5 பேர் போட்டிபோடுவார்கள். இவருக்கு முன்னால, அவருக்கு பின்னால என அப்பெண் வடிவேலுவிடம் கூறுவார். அதே போல வசந்தியின் வாழ்க்கையும் அமைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.