கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், திருச்சி மாநகரில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியதாவது:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. எனவே, கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு மின் விநியோகம் கிடைக்காது.
எனவே, இந்த நிலையங்களில் இருந்து குடிநீா் பெறும் விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, தில்லைநகா், அண்ணாநகா் கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா், உய்யாகொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, சமுதாய காலனி, எம்.எம் நகா் மற்றும் தேவதானம், மகாலட்சுமி நகா், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, ஜெகநாதபுரம், திருவறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி, ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா் மற்றும் கணேஷ் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நாளை புதன்கிழமை ஒருநாள் மட்டும் இருக்காது. வியாழக்கிழமை முதல் வழக்கம்போல குடிநீா் விநியோகம் நடைபெறும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்கவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.