சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி டிராபி போட்டியில் விராட் கோலி விளையாடியதை பார்ப்பதற்காக சுமார் 20,000க்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்த நிலையில் விராட் கோலி வெறும் 6 ரன்னில் ஆட்டமிழந்து தலை குனிந்தபடி வெளியேறினார்.
அவர் ஆட்டம் இழந்ததை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் அதிர்ச்சிகரமாகவும் இருந்தது. “இதுக்கு தானா இத்தனை பில்டப்?” என பலரும் சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலியின் டெஸ்ட் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பலமுறை ஆஃப் சைடில் வந்த பந்தை சரியாக அடிக்க முடியாமல் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வந்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை அடுத்து விராட் கோலி, ரோஹித் சர்மா உட்பட இனி அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என பிசிசிஐ அறிவித்தது. இதை அடுத்து விராட் கோலி டெல்லி மாநில கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாட முடிவு செய்தார்.
ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் முதல் நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்யவில்லை. இரண்டாம் நாளான இன்று 2 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் பேட்டிங் செய்தார் விராட் கோலி. அவரை பார்ப்பதற்கு சுமார் 20,000 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு இருந்தனர். பொதுவாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் அதிகமான அளவில் வரமாட்டார்கள் . ஆனால் விராட் கோலி விளையாடுவதால் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.
இந்த நிலையில் 15 பந்துகளை சந்தித்த விராட் கோலி 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரயில்வேஸ் அணியின் ஹிமான்ஷூ சங்வான் வீசிய அற்புதமான இன்ஸ்விங்கர் பந்தில் கோலியின் ஆஃப் ஸ்டம்ப் பறந்தது. அதன் பின் ஹிமான்ஷூ சங்வான் விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார்.
விராட் கோலி ஏமாற்றம் அடைந்து தலையை தொங்க போட்டுக் கொண்டே நடந்து சென்றார். அந்த காட்சி மிகவும் சோகமானதாக இருந்தது. இந்த சம்பவத்தால் விராட் கோலியின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்தனர்.
இதை அடுத்து இனி விராட் கோலிக்கு டெஸ்ட் அணியில் இடம் அளிக்கக்கூடாது எனவும் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டம் மீதம் இருப்பதால் அப்போது விராட் கோலி ரன் குவித்து தனது இடத்தை தக்க வைப்பாரா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.