அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கிராமத்தில், ராமு (எ) இளவரசன் என்பவர் வசித்து வருகிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு, இவர் சிறுமி ஒருவரை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய், சம்பவம் தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், 26.05.2022 அன்று காவல் ஆய்வாளர் சுமதி வழக்கு பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ராமு சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, போலீசார் ராமு மீது கடத்தல், பாலியல் வன்புணர்வு, போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, அரியலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, காவல்துறையினர் சார்பில் அனைத்து சாட்சியங்களும், ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி செல்வம், சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ராமுக்கு ஆயுள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் ராமுவை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகத் துறை, 2020இல் வெளியிட்ட 2019ஆம் ஆண்டுக்கான தரவுகளில், இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் 35.3% வழக்குகள் பதிவாகியுள்ளது. அதில் 8% தமிழ்நாட்டில் இருந்து பதிவாகியுள்ளது.