காதல் சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னுடன் 3 வருடன் குடித்தனம் நடத்தி விட்டு தற்போது ஏமாற்றுவதாக துணை நடிகை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்து உள்ள காதல் சுகுமார், நான் காமக்கொடூரன் என்பது போல இணையத்தில் வந்த செய்திகளை பார்த்து என் ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து போய்விட்டது, அவர்களை பாதுகாப்பதற்காகத்தான் நான் அமைதியாக இருந்தேன் என்று கண்ணீருடன் பேசி உள்ளார்.
நடிகர், இயக்குநருமான காதல் சுகுமார். காதல் படத்தில் பரத்தின் நண்பனாக நடித்து பிரபலமான காதல் சுகுமார். அண்மையில் கவின் நடித்த ஸ்டார் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து, தெருக்கூத்து கலைகள் மற்றும் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியான டப்பாங்குத்து படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார்.
தற்போது, காதல் சுகுமார், வெற்றி வேலப்பர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
கடந்த வாரம் துணை நடிகை ஒருவர், காதல் சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று வருடமாக குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் அளித்த வடபழனியைச் சேர்ந்த துணை நடிகைக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் பெற்றோருடன் வாழ்ந்து வந்ததாகவும். அப்போது தான், காதல் சுகுமாருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்ததாகவும், அப்போது, சுகுமார், தனக்கு திருமணமானதை மறைத்துவிட்டு, என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 ஆண்டுகளாக பழகி, நகை, பணம் என அனைத்தையும் வாங்கிவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார்.
இது குறித்து விளக்கம் அளித்த காதல் சுகுமார்:- நான் தலைமறைவாகிவிட்டதாக பல்வேறு செய்திகள் பரவின. நான் தலைமறைவாகவில்லை இதுபோன்று நம் சமூக வலைதளங்களில் பரவும் ஒரு செய்தியால் எனது குடும்பமே நிலைகுலைந்து போய்விட்டது. அவர்களை தேற்றுவதற்கும் சமாதானப்படுத்துவதற்கே நான் மிகவும் சிரமப்பட்டேன். அதனால் நான் ஊடகங்களை சந்திப்பது தாமதம் ஆகிவிட்டதே தவிர நான் தவறு செய்து விட்டு தலைமறைவாகவில்லை. அதேபோல நான் காமக்கொடூரன், சைக்கோ என்றெல்லாம் செய்தி வெளியிடுகிறார்கள் இதை பார்க்கும்போது எனக்கு மனவேதனையாகத்தான் இருக்கிறது.
சம்பந்தப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார், அது குறித்து எனக்கு சம்மன் வந்தது. அதன் பிறகு என்னையும் அவரையும் அழைத்து நேரடியாக விசாரித்தார்கள். விசாரணைக்கு பிறகு இருவரும் இது குறித்து மீடியாக்களில் எதுவும் பேசக்கூடாது என்றும், ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சனம் செய்து கொள்ளக்கூடாது என்றுதான் சொல்லி வெளியில் அனுப்பினார்கள். அதன் பிறகு தான், அந்த பெண், அனைத்து மீடியாக்களிலும் அவரும் நானும் சேர்ந்து எடுத்த வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை எல்லாம் எடுத்து போட்டு என்னை ஒரு காமகொடூரன் ஆகவே சித்தரித்துவிட்டார்கள். இதனால் என்னுடைய குடும்பம் மிகவும் உடைந்து போய் மன வேதனைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
நான் திருமணமானதை மறைத்ததாக சொல்கிறார்கள், எனக்கு திருமணமானது அந்தப் பெண்ணிற்கு நன்றாக தெரியும், இருவருக்கும் பிரச்சனை ஏற்பட காரணமே குடும்பத்தை விட்டு விட்டு தன்னோடு இருக்க சொன்னார்கள் அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் தான், இருவருக்கும் இடையே பிரச்சனையே ஏற்பட்டது. புகார் அளித்த அந்தப் பெண்ணிற்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இருவருமே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் திருமணம் ஆகி 8 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இப்படி இரண்டு பேருக்குமே குடும்பம் இருக்கிறது. இதனால், குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் நான் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தேன்.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைக்காமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் என்னை போல தான் உங்களுக்கும் அடி விழும். இன்று என் வாழ்க்கையில் நடப்பது உங்கள் அனைவருக்கும் பாடம். ஆனால், இது எனக்கும் பாடம் இதனால் அனைவரும் உங்களுடைய வாழ்க்கையில் கவனமாக இருங்கள். யாருக்கும் நாம் செய்யும் தவறு யாருக்கும் தெரியாது என்று நினைக்காதீர்கள் நிச்சயமாக நாம் செய்யும் தவறு கடவுளுக்கு தெரியும் என்றாவது ஒருநாள் நம் நேரம் சரியில்லாத போது அவை அனைத்தும் நம் கண் முன்னாடி வந்து நிற்கும். இந்த வீடியோவின் மூலம் என் குடும்பத்தாரிடமும், என் நண்பர்கள், என் மனைவி, என் குழந்தைகள் என அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று காதல் சுகமார் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.