புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலையில் ஏராளமானோர் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர் . பழனி மலையடிபுரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் காவடிகளை சுமந்து மேல தாளத்துடன் ஆடி, பாடி கிரிவலம் வரும் பக்தர்கள் முருகனின் தரிசிக்க மலை மீது சென்று வருகின்றனர். பாத விநாயகர் கோவில் , திருஆவினன்குடி முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி மலை மீது செல்லும் வகையில் யானை பாதை வழியாக மலைக்கோயில் செல்லவும், சாமி தரிசனம் முடித்து வரும் பக்தர்கள் படிப்பாதை வழியாக கீழே இறங்கி செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மலைக் கோயிலில் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் விரைவாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. அதேசமயம் பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் மதுரை – பழனிக்கு காலை 8.45 மணிக்கும், மறுமார்க்கத்தில் மாலை 3 மணிக்கும் சிறப்பு ரயில் புறப்படும் என்றும் தென்னக ரயில்வே கூறியுள்ளது.
இந்நிலையில் பழனியில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் ரூ.1000 அபராதம் என திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பழனியில் அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அன்னதானம் வழங்க பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது எனவும் உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அன்னதானம் வழங்கிய பின் சம்பந்தப்பட்ட இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல வருடங்களாக முருகா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் தொண்டு உள்ளம் படைத்தவர்கள் இந்த அறிவிப்பினால் பெரும் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.
சாலை ஓரம் வழங்கும் இந்த அன்னதானங்களை பல ஏழை பக்தர்கள் பணம் எதுவும் எடுத்துச் செல்லாமல் முருகனை தரிசிக்க செல்வார்கள் அவ்வாறு செல்லும் பக்தர்கள் அனைவரும் இந்த தகவலை கேட்டு கவலைக்கு உள்ளாகி உள்ளனர் .