உதயநிதி போன்று ஸ்டாலின், சந்தானம் உதவியில் அஜித்குமார் வரவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “அங்கு நடிகர் அஜித்குமார் கழிப்பறை பயன்படுத்தியிருந்தாலும், உதயநிதி திராவிட மாடல் என பெருமை பேசியிருப்பார்.
தனி மனிதனாக, தனது கடின உழைப்பால் உயர்ந்தவர் நடிகர் அஜித்.
சினிமாத் துறையில் உச்சத்தில் இருக்கும்போது, தனது விருப்பத்திற்காக கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். உதயநிதியைப் போல காமெடி நடிகர்களின் துணையோடு சினிமாவில் வெற்றி பெற்றவர் அல்ல அஜித். எந்த காட்பாதர் இல்லாமலும் சினிமாவில் முன்னுக்கு வந்தவர்.
உதயநிதி போன்று ஸ்டாலின், சந்தானம் உதவியில் அவர் வரவில்லை. அஜித்தின் வெற்றிக்கு திராவிட மாடல் அரசு காரணம் என்றால், இங்கு மைக் உள்ளது, அதனால் காரித் துப்ப முடியாது; வெளியே சென்ற பிறகு காரி துப்புவேன். அரசியலுக்குத் தகுதியே இல்லாத நபர் உதயநிதி” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, துபாய் கார் பந்தயத்தில் 3வது இடம் பிடித்த அஜித் குமார் ரேசிங் அணியைப் பாராட்டியும், அந்த ரேஸில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவைப் பயன்படுத்தியது குறித்தும், விளையாட்டுத் துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், “24H துபாய் 2025-இல் 991 பிரிவில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த மதிப்புமிக்க பந்தய நிகழ்வில் திராவிட மாடல் அரசின் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை காட்சிப்படுத்தியதற்காக நன்றி தெரிவிக்கிறேன். நமது நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்ப்பதற்கு அஜித் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்து இருந்தார்.