500க்கும் மேற்பட்ட குடும்பத்தார்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அதிமுக கவுன்சிலர். பொதுமக்கள் பாராட்டு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது மேலும், முன்பு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இந்தாண்டு அரசு ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கக்கூடிய பொருட்களின் அளவை குறைத்து, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு மட்டும் தமிழக அரசு அறிவித்து அதனை தற்போது வழங்கி வருகிறது.
இந்நிலையில் அந்த குறையை போக்கும் வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21 – வது வார்டு பனமங்களம் பகுதியின் நகர் மன்ற உறுப்பினரான அதிமுகவை சேர்ந்த முழுமதி இமயவரம்பன் தனது வாடிற்கு உட்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் அறிவுறுத்தலின் படி, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் மார்கோனி ஏற்பாட்டில் வழங்கி உள்ளார். அந்த வகையில் தனது வார்டின் உள்ள பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக மகிழியுடன் கொண்டாடிட ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை தங்கள் பகுதியில் உள்ள 500 -க்கும் மேற்பட்ட குடும்பதாரர்களுக்கும் அவர்களது இல்லத்திற்கே நேரடியாக தேடி சென்று பொங்கல் பரிசு தொகுப்பை சொந்த செலவில் வழங்கி, பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார்
இதற்கு சீர்காழி நகராட்சியில் உள்ள மற்ற வார்டு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிலர் கூறுகையில் அரசு அறிவித்து கடந்த இரண்டு நாட்களாக வழங்கி வரும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன்கள் கூட முழுமையாக இன்னும் தங்கள் கைகளுக்கு வராத நிலையில் அதற்காக காத்திருக்கும் சூழலில் நகராட்சி வார்டு கவுன்சிலர் தனது சொந்த செலவில் பொங்கல் பரிசு தொகுப்பினை வீடு தேடி வந்து வழங்குவது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.