Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாலையில் முதல் கணவனை செருப்பால் அடித்த 3 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி

0

சென்னை திருவல்லிகேணி எல்லீஸ் சாலையை சேர்ந்த ஜோதி என்பவர், சென்னை மேடவாக்கத்தில் 2-வது கணவருடன் வாழ்ந்தார்.

இதனிடையே முதல் கணவர் மணிகண்டன், தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த இளம் பெண் மறுத்துவிட்டார். இதனால் அவர் உயிரையும் இழந்து உள்ளார் இது குறித்த விவரம் ….

கள்ளக்காதல் பல குடும்பங்களில் புயலை வீசி வருகிறது. திருமணத்தை மீறிய உறவு அல்லது முதல் உறவை சட்டப்பூர்வமாக பிரியாமல், இரண்டாவது திருமணம் செய்வது போன்றவை பல சமூக சிக்கல்களை ஏற்படுத்துகிறது. திருமணத்தை மீறி உறவுகள் சமூகத்தில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் நடக்கும் உளவியல் சிக்கல்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இது முக்கிய காரணமாக உள்ளது.

சென்னை திருவல்லிகேணி எல்லீஸ் சாலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42) இவருடைய மனைவி ஜோதி (வயது 30). இவர்களுக்கு 3 மகன்கள் இருக்கிறார்கள். முதல் மகன் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். 2-வது மகன் 6-ம் வகுப்பு படித்து வருகிறார், 3-வது மகன் 5-ம் வகுப்பும் படித்து வருகிறார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிக்கும், அவரது கணவர் மணிகண்டனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தன் முதல் கணவர் மணிகண்டனை பிரிந்த ஜோதி, தனது மகன்களுடன் மேடவாக்கம் புதுநகர் 4-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தார். அவர், மேடவாக்கத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். இதற்கிடையில் அதேபகுதியில் வசிக்கும் தனது கணவர் மணிகண்டனின் உறவினரான கிருஷ்ணமூர்த்தி (வயது 38) என்பவருடன் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கணவன்-
மனைவி போல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்கள்.

இதை அறிந்து ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அதற்கு ஜோதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது .

கடந்த 11ம் தேதி இரவு மணிகண்டன், மேடவாக்கம் கூட்ரோடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஜோதி, தனது 2-வது கணவர் கிருஷ்ணமூர்த்தி உடன் பைக்கில் வந்துள்ளார். மணிகண்டன் நிற்பதை பார்த்த ஜோதி, அருகில் சென்று வாக்குவாதம் செய்தாராம். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

அப்போது மது போதையில் இருந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியை சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து, தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த கத்திக்குத்து விழுந்ததால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை தடுக்க முயன்ற அவரது 2-வது கணவர் கிருஷ்ணமூர்த்திக்கும் கத்திக்குத்து விழுந்தது. அங்கிருந்தவர்கள் மணிகண்டனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ஜோதி மற்றும் கிருஷ்ணமூர்த்தியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணமூர்த்தி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேடவாக்கம் போலீசார் ஜோதி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதான மணிகண்டனிடம் போலீசார் விசாரித்த போது, மனைவி ஜோதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் சபரிமலைக்கு சென்று வந்துள்ளேன். பிள்ளைகளுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி ஜோதியை வரவழைத்துள்ளார். அதன்படி பள்ளிக்கரணை பகுதியில் இருவரும் சந்தித்தார்களாம். அப்போதும் மணிகண்டன் தன்னுடன் வந்து குடும்பம் நடத்தும்படி ஜோதியை அழைத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஜோதி, மணிகண்டனை செருப்பால் அடித்துவிட்டு சென்றுவிட்டாராம்

அதன் பிறகு தான் மணிகண்டன் மேடவாக்கம் கூட்ரோடு பகுதியில் இருப்பதை அறிந்த ஜோதி, தனது 2-வது கணவர் கிருஷ்ணமூர்த்தியுடன் அங்கு சென்று அவருடன் தகராறு செய்துள்ளார். மனைவி செருப்பால் அடித்ததால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், மீண்டும் 2-வது கணவருடன் வந்து மனைவி தகராறு செய்ததால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியை கொன்றதும், தடுக்க வந்த கிருஷ்ணமூர்த்தியையும் குத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் மேடவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.