மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடர்ந்த வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, திருச்சி சிறையில் இருந்த அவரை என்ஐஏ விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜியாவுதீன் பாகவி(வயது 42). இவர், கும்பகோணம் வட்டம் கோவிலாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் அரபி பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. சோழபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கியிருந்து, கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், அந்தக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு, ஜியாவூதீன் பாகவதி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி கடந்த டிச.25-ம் தேதி ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, டிச. 25-ம் தேதி ஜியாவூதீன் பாகவியை கைது செய்தனர். பின்னர் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜிவாவுதீன் பாகவியை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீஸார் கூறியதாவது: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஹிஸ்புத் தஹ்ரிர் என்ற அமைப்பில் செயல்பட்டு வந்ததாக, ஜியாவுதீன் பாகவியை தேசிய புலனாய்வு அமைப்பினர் 2022 மார்ச் 14-ம் தேதி கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜியாவூதீன் பாகவி மாதந்தோறும் நீதிமன்றத்தில் ஆஜாராகி வந்துள்ளார்.
இதனிடையே, அவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டதால், கடந்த 8-ம் தேதி அவரால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, திருச்சி சிறையிலிருந்து நேற்று ஜாமீனில் வந்த ஜியாவூதீன் பாகவியை, தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு போலீஸார் கூறினர்.