ஆன்லைனில் விண்ணப்பித்த புதிய ரேஷன் கார்டுக்கு 3000 ரூபாய் லஞ்சம் கேட்ட பெண் வட்ட வழங்கல் அலுவலர் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்த அருள்குமார் என்பவர் ரேஷன் கார்டுக்காக கடந்த 3-ந்தேதி ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க வட்ட வழங்கல் அலுவலர் சுமதி ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இந்த விவகாரத்தில் பெண் அதிகாரி சுமதி கையும், களவுமாக சிக்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி என்பவருடைய மகன் அருள்குமார் குடும்ப அட்டை வாங்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து இவர் புதிய ரேஷன் கார்டுக்காக கடந்த ஜனவரி 3-ந்தேதி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளார். பின்னர் ஜனவரி 4-ந்தேதி சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு அருள்குமார் சென்றிருக்கிறார்.
அங்கு வட்ட வழங்கல் அலுவலர் சுமதியிடம் தான் ஆன்லைன் மூலமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்குமாறும் கேட்டிருக்கிறார். அதற்கு சேத்துப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, ரூ.3 ஆயிரம் கொடுத்தால் தான் ஒப்புதல் வழங்குவேன் என்று கூறினாராம்.
ஆனால் பணம் கொடுக்க விரும்பாத அருள்குமார், இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துணை துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகனிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் நேற்று ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அருள்குமாரிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சேத்துப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சுமதியிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.
அதேநேரம் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மதன் மோகன், தலைமை காவலர் ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் சேத்துப்பட்டு வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வெளியே மறைந்திருந்து காத்திருந்தனர்.
அவர்கள் கொடுத்து அனுப்பிய ரூ.3 ஆயிரத்தை, அருள்குமார், சேத்துப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சுமதியிடம் கொடுத்தார். அதை வாங்கிய அதிகாரி டைரிக்குள் பணத்தை வைத்தார். அப்போது போலீசார் சென்று கையும், களவுமாக பிடித்து, வட்ட வழங்கல் அலுவலர் சுமதியை கைது செய்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.