ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பகல் பத்து 5ம் நாளான இன்று பெருமாள் மாந்துளிர் நிற பட்டு உடுத்தி காட்சி.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது.
பகல் பத்து உற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை ஸ்ரீ நம்பெருமாள், அரங்கனை மட்டுமே பாடிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை பிரபந்திற்காக, நம்பெருமாள் – மாந்துளிர் நிற பட்டு உடுத்தி காட்சியளித்தார்.
மேலும் நம்பெருமாள் சௌரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துராய்; நெற்றி சரம், சூர்ய- சூர்ய வில்லை சாற்றி, மகர கர்ண பத்திரம்; ரத்தின அபய ஹஸ்தம்- தொங்கல் பதக்கம்;ரத்தின கடி அஸ்தம் (இடது திருக்கை), திரு மார்பில் ஆபரணங்களுகே ஏற்றம் தரும் -ஸ்ரீ ரங்க விமான பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 18 பிடி (6 வட) முத்து சரம் , காசு மாலை; அரைச் சலங்கை;
பின்புறம் – புஜ கீர்த்தி ; அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம்; காசு மாலையும் தழைந்து வரும் படி சாற்றி, கையில் தாயத்து சரங்கள், தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார்.
இன்று திருமாலை வழிபடும் வைணவ பக்தர்களுக்கு உகந்த நாளான சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அதேபோல் திருச்சி மற்றும் வெளி மாவட்டங்கள் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் காவல்துறையினர் கோவிலில் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.