தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை. அதிக லாபம் யாருக்கு ?
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் போது அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தற்போது அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் ஆகிய இரண்டு நாட்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. இதைத்தொடர்ந்து ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு அன்றைய தினமும் விடுமுறை. மேலும் மொத்தமாக தமிழகத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது:.
தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமான டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 4829 என்று கூறப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளின் கீழும் 4 முதல் 5 சந்து கடைகள் செயல்படுகின்றன. மேலும் டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
இவை சட்டவிரோதமானவை. அவை எங்கெங்கு உள்ளன, அவற்றை நடத்துபவர்கள் யார்? என்ற விவரங்கள் அனைத்தும் காவல்துறைக்கு நன்றாகத் தெரியும். இந்தக் கடைகளை மூடுவதுடன், அவற்றை நடத்துபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர்கள் செய்வதில்லை.
அதற்குக் காரணம், அந்தப் பகுதியைச் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமின்றி காவல்துறைக்கும் மாமூல் தரப்படுவது தான். 24 மணி நேர மது விற்பனைக்கு காரணம். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு மதுக் கடை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. மது குடிக்க வேண்டும் என்றால், அதிக தூரம் செல்லத் தேவையில்லை, கைக்கெட்டிய தொலைவில் மது கிடைக்கும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
அதனால் தான் மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் மதுவுக்கு அடிமையாகின்றனர். இதற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பார்களை உடனடியாக மூட தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள இந்த விடுமுறை தினங்களில் ரெகுலர் குடிமகன்கள் முன்னதாகவே வாங்கி வைத்து விடுவார்கள் ஆனால் மற்றவர்களுக்கு விடுமுறை அறிவித்தது தெரியாமல் சரக்கு அலையும் போது இதுபோன்று முறைகேடாக விற்பனை செய்யும் பார் உரிமையாளர்களுக்கு தான் அதிக லாபம் எனக் கூறியுள்ளனர் .