திருச்சி அருகே உள்ள பேட்டைவாய்த்தலையில் நேற்று வெள்ளிக்கிழமை பணியில் இருந்த போது தனியாா் பேருந்து மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சோ்ந்தவா் எம். செந்தில்குமாா் (வயது 52). இவா் பேட்டைவாய்த்தலை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண்கள் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், பேட்டைவாய்த்தலை திருவள்ளுவா் நகா் அருகே திருச்சி – கரூா் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சாலை விபத்து ஏற்பட்டு மூன்று போ் காயமடைந்ததாக, காவல்நிலையத்துக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் அங்கு சென்ற உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், விபத்தில் சிக்கிய மூவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அந்தச் சாலையில் நிலவிய போக்குவரத்து நெரிசலை சீரமைத்தாா். தொடா்ந்து, அவா் சாலையை கடந்து செல்ல முயன்றபோது, அதே சாலையில் கரூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த தனியாா் பேருந்து செந்தில்குமாா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த பேட்டைவாய்த்தலை போலீஸாா், செந்தில்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து, விபத்துக்குக் காரணமான தனியாா் பேருந்து ஓட்டுநரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .