திருச்சியில் லாட்டரி விற்ற 20 பேர் கைது – சொகுசு காருடன் ரூ 5 லட்சம் பணம் பறிமுதல். போலீசார் அதிரடி நடவடிக்கை .
திருச்சியில் லாட்டரி விற்ற 20 பேர் கைது – சொகுசு காருடன் ரூ 5 லட்சம் பணம் பறிமுதல்.
இரண்டு வாகனங்கள், 10 செல்போன்களும் சிக்கியது. போலீசாரின் அதிரடி நடவடிக்கை .
திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர் . 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொகுசு கார், இரண்டு வாகனங்கள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி ஆன்லைன் லாட்டரி மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தலை தூக்கி உள்ளது. குறிப்பாக திருச்சி மாநகரில் லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது. வெளி மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு உள்ளவர்களை பிடிக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் நடந்த அதிரடி வேட்டையில் திருச்சி தொழிலதிபரும், திமுக பிரமுகருமான லாட்டரி அதிபர் எஸ்.வி.ஆர். மனோகர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து நேற்று திருச்சி மாநகரில் கன்டோன்மென்ட், திருவரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை , தில்லை நகர் ,உறையூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் அந்தந்த சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர் .இந்த சோதனையில் 20 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர் .இதில் உறையூர் பகுதியில் பிடிபட்ட செந்தில்குமரன் என்பவரிடம் 4,92,100 ரூபாய் பணம் கட்டு, கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது .
இதே போல் கைதான மற்றவர்களிடம் இருந்து10 செல்போன்கள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒரு சொகுசு கார் மற்றும் கட்டு, கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து திருச்சி மாநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இனியும் லாட்டரி விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கைதான சிலர் லாட்டரி விற்றதுடன் பரிசுத்தொகை விழுந்தவர்களுக்கு பரிசுத்தொகையை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். பரிசுத்தொகை கிடைத்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு, அந்தந்த சரக போலீசில் புகார் அளித்ததன் பேரில் இந்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.