தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே நகரில் கிருஷ்ண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் முத்தாரம்மாள்.
கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது முத்தாரம்மாள் 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில் கிருஷ்ண பெருமாள், அவரது தாய் லட்சுமி, தந்தை ஆகியோர் இணைந்து வரதட்சனை கேட்டு முத்தாரம்மாளை கொடுமைப்படுத்தி வந்தனர். மேலும் முத்தாரம்மாளுக்கு தேவையான சத்து மாத்திரைகளை வாங்கி கொடுக்காமல் நான்கு மாத கர்ப்பத்தை கலைக்க சொல்லி லட்சுமியும் கிருஷ்ண பெருமாளும் முத்தாரம்மாளை அடித்து துன்புறுத்தி உள்ளனர். அவரிடம் இருந்த செல்போனையும் உடைத்துள்ளனர்.
இதுகுறித்து முத்தாரம்மாள் தனது தந்தையிடம் தனக்கு நடக்கும் கொடுமைகளை கூறியுள்ளார். அவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணா பெருமாளும், அவரது தாயும் இளம்பெண்ணிடம் வரதட்சனை கேட்டு சித்திரவதை செய்துள்ளனர். மேலும் போலீசில் எப்படி புகார் அளிக்கலாம் என கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்தாரம்மாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.