தொடர் மழையினால் எங்கள் வீடுகள் சேதமடைந்துள்ளது என விஏஓவிடம் கூற போனால் அவரது அலுவலகமே சேதம் அடைந்து உள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் தொடரும் மழையால் சேதமடைந்து வரும் விஏஓ அலுவலக மேற்கூரைகளிலிருந்து வடியும் மழை நீரால் அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் புதன்கிழமை முதல் தொடரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வையம்பட்டி, கருங்குளம், முகவனூா், சித்தாநத்தம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் பெருக்கெடுத்துள்ள காட்டாற்று வெள்ளம் வீதிகளிலும், குடியிருப்புகளிலும் புகுந்து வருகிறது. இதனால் வீடுகளில் சேதம் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஏற்கெனவே சிதிலமடைந்து வரும் செவலூா் விஏஓ அலுவலக மேற்கூரைகள் முழுமையாக மழை நீா் வடியும் நிலையில் உள்ளன.
அப்பகுதி பொதுமக்கள் தொடர் மழையினால் எங்கள் வீடுகள் சேதமடைந்துள்ளது என கிராம நிர்வாக அதிகாரியிடம் கூற போனால் அவரது அலுவலகமே சேதம் அடைந்து உள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
இதனால் கோப்புகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் நெகிழி பைகளால் மூடப்பட்டு அலுவல்கள் நடைபெறும் நிலை உள்ளது.
எனவே இந்த அலுவலகத்தை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.