Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக ஆட்சியில் இருக்கவும், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறவும் எடப்பாடி பழனிச்சாமியின் மறைமுக உதவி தான் காரணம். திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி .

0

 

திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நேற்ற ஞாயிற்றுக்கிழகை நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது: ஒரே நாடு ஒரே தேர்தல் சரியாக வரும் என அனுமானிக்க முடியவில்லை. பொருத்திருந்து பார்ப்போம்.

மழை, வெள்ளம், புயல் பாதிப்பில் மக்கள் எப்படியோ தப்பி உள்ளனர். திமுக மக்களை ஏமாற்றி ஆட்சி செய்கிறது. திமுக ஆட்சியில் விளம்பரம் தான் இருக்கிறதே தவிர சொல்லுமளவுக்கு எதுவும் இல்லை.

பழனிசாமி எதை வேண்டுமானாலும் பேசுவார். அவருக்கு தெரிந்ததெல்லாம் துரோகம் தான். திமுக ஆட்சியில் இருக்கவும், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறவும் பழனிசாமியின் மறைமுக உதவி தான் காரணம்.

இரட்டை இலையை ஜனநாயக ரீதியாக மீட்டெடுப்போம். பழனிசாமி என்ற சுயநலவாதியிடம் இரட்டை இலை சிக்கிக் கொண்டு, திமுக வெற்றிக்கு உதவியாக உள்ளது வேதனை. பழனிசாமிக்கு காவடி தூக்குபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு 2026 தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு முடிவுரை எழுதிவிடுவார்கள்.

கொலை, கொள்ளை, ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னையும், குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, 2026 தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியே இல்லாத அளவுக்கு பழனிசாமி செய்துவிடுவார்.

நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். கூட்டணி வலுப்பெற திமுக எனும் தீய சக்தி ஆட்சிக்கு தேஜகூ இந்தத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் முடிவுரை எழுதி நல்லதொரு மக்களாட்சியை, கூட்டணி ஆட்சியை கொண்டு வருவோம்.

திருமாவளவன் குழப்பத்தில் உள்ளார். ஆதவ் அர்ஜூனா பேசியதை வைத்து, திமுகவுக்கும்-
விசிகவுக்கும் இடையே பிரச்சினை இருக்கிறது என மக்கள் எண்ணுகின்றனர். என்னதான் திருமாவளவன் மறுத்தாலும், நெருப்பில்லாமல் புகையாது என்பது போல திமுக கூட்டணியில் பிரச்சினை உள்ளது. கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரும். ஆதவ் அர்ஜூனா நீக்கத்துக்கு திருமாவளவனுக்கு அழுத்தம் தரப்பட்டதாக தெரியவில்லை. ஆனால் திருமாவளவன் அவரை சரியாக கையாளவில்லை. முளையிலேயே கிள்ளியிருக்க வேண்டும்.

திமுக கூட்டணியை விட பலமான கூட்டணியாக எங்கள் கூட்டணி அமையும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்கள் வருவார்களா? காங்கிரஸ் தான் வரவேண்டும். காங்கிரஸ் வந்தால் ஏற்போம்.

பதவி சுகம் அனுபவித்தவர்கள் பணம் செலவு செய்ய வேண்டும் என தற்போது பதவியில் உள்ள பழனிசாமி தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார். பாஜகவுடன் கூட்டணி வைத்தப் பின் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை.

அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதிமுக ஒற்றுமையாக இருக்க அவர்கள் செய்த விஷயங்கள் பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிய கதையாக மாறியிருக்கலாம். அதிமுக வலுவாக இருக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் எண்ணம்.

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து எங்கள் கூட்டணியில் பேசி முடிவு எடுப்போம். அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் சூழல் வந்தால் அப்போது பேசுகிறேன். யூகத்துக்கு பதில் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி மாவட்டத்தில் பிறந்தநாளை முன்னிட்டு விழாக்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு போட்டியினை சிறப்பாக நடத்திய திருச்சி மாவட்ட செயலாளரும். முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் அவர்களை டிடிவி தினகரன் தனிப்பட்ட முறையில் பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.